FreeWebSubmission.com TO KNOW MORE.....: Tamil
Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Mother Teresa and her Missionary Works

புனித அன்னை தெரசாவின் பிறரன்புச்சேவையும் நற்செய்திப் பணியும்


   நற்செய்தி அறிவிப்பது திருஅவையின் இயல்பான மற்றும் இன்றியமையாதச் செயல். எல்லா வகையான நிலையிலும் எளிய மற்றும் இனிமையான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கின்ற இன்றைய சமுதாயம் ஆன்மீக வாழ்விலும் அருள்வாழ்விலும் வளர்ச்சி காணவும் இயேசுவின் நற்செய்தியை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் புதுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றைய தமிழக திருஅவைக்கு அவசியமானது இத்தகைய புதியமுறை நற்செய்தி அறிவிப்பதின் முக்கியத்துவமும் சிறப்புத்தன்மைகளை கற்றுக் கொண்டு செயல்படுவதே. இத்தகைய புதியமுறை நற்செய்தி அறிவிப்பின் வழிமுறைகளை அனைவரும் கற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் தேவையான மனநிலையே. இந்த புதியமுறை நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு புதிய நற்செய்தி அல்ல மாறாக கிறிஸ்தவ வாழ்வில், குடும்ப வாழ்வில் மற்றும் அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்தப்படுகின்ற அன்பும் அக்கறையும் மிகுந்த ஒரு சாட்சிய வாழ்வே நற்செய்தி அறிவிக்க துணைபுரியும். தனிமனித குடும்பங்களும், கிறிஸ்தவக் குடும்பங்களும் உண்மையான மனித அன்பை உணர்ந்துகொண்டும், பகிர்ந்துகொண்டும் வாழ முயல்வதே புதியமுறை நற்செய்தியை அறிவிக்கக்கூடிய வழிமுறையாகும்.

 இத்தகைய புதியமுறை நற்செய்தி அறிவிப்பையும் பிறரன்புச்செயல்களையும் தனது அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தி வாழ்ந்து வந்த புனித அன்னை தெரசா இன்றைய உலகிற்கு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு. புனித அன்னை தெரசாவின் பிறரன்புச் சேவைகளை ஒரு நற்செய்தி அறிவிப்பு என்று சொல்ல முடியுமா? புனித அன்னை தெரசாவின் நற்செய்தி அறிவிப்பு முறைகளை சரியாக புரிந்துகொண்டால்தான் இதை ஏற்றுக்கொள்ள முடியும். இதற்கு அன்னை தெரசாவின் பிறப்பு, பெற்றோர், படிப்பு மற்றும் துறவற வாழ்வைத் தேர்ந்துகொண்ட நிலை, அவரது பிறரன்புப் பணிகளையும் புரிந்துகொள்ள முயலும்போது தான் அன்னை தெரசாவின் நற்செய்திச் பணியினை அவரது பிறரன்புச் சேவைகள் எடுத்துரைப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


பிறப்பு மற்றும் பெற்றோர்

       அல்பேனியா மலைப்பாங்கான மற்றும் அழகிய இயற்கை வளம் மிகுந்த நாடு. வடக்கில் ஆல்ப்ஸ் மலை, தெற்கில் பெனின்சுலா, வடக்கிலும் கிழக்கிலும் யூகோஸ்லாவியா என்ற எல்லைகளைக் கொண்டுள்ளது. மக்களின் முக்கியமான தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, பருத்தி போன்றவை. இந்நாடு உலகத்திற்கே மிக நன்றாக தெரிந்தது காரணம் அன்னை தெரசா பிறந்து வளர்ந்த நாடு என்பதே. இத்தகைய சிறப்பு வாய்ந்த அல்பேனியா நாட்டிலுள்ள ஸ்கோப்ஜி என்ற நகரத்தில் நிக்கோலா போதாஜாக்ஸ் மற்றும் த்ரானா என்ற தம்பதியருக்கு கடைகுட்டியாக 1910ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் தேதி ஆக்னஸ் கொன்ஸ்கா போஜாக்ஸியு பிறந்தார். ஆக்னெஸின் தந்தை  ஒரு கட்டிட பணியாளர் தாயார் மிகவும் பக்தியும், பணிவும், கருணையும் மிகுந்தவர்.  ஆக்னெஸ்க்கு ஆஜே என்ற அக்காவும், லாசர் என்ற ஒரு அண்ணணும் இருந்தனர். அன்பான அழகிய சிறிய கிறிஸ்தவ குடும்பம். தங்கள் குழந்தைகள் மூவரையும் பக்தியிலும், ஒழுக்கத்திலும், நற்பண்புகளிலும், ஏழைகள் மீது அக்கறை காட்டுவதிலும் அவர்களின் பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வளர்த்தனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் ஆக்னெஸின் தாயார் ஏழைகளை அரவணைத்து செல்வதிலும், தங்கள் ஊரில் யாராவது நோயினாலோ, துன்பத்தினாலோ பாதிக்கப்பட்டிருந்தால் தவறாமல் சென்று உதவக்கூடிய நற்பண்பு மிகுந்தவர். இப்படி மற்றவர்களுக்கு உதவிபுரிய செல்லும் போது தனது கடைக்குட்டி ஆக்னெஸையும் பல சமயங்களில் அழைத்து சென்றுள்ளார்கள்.

      அதோடு அவர்களின் இல்லத்தை நாடி உதவிகேட்டு வந்தவர்களை வெறுமையாக அனுப்பாமல் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வோடு உபசரித்ததை பலநாள்கள் இளம் ஆக்னெஸ் கண்டு பூரிப்படைந்துள்ளார். எனவே தான் தனது வாழ்க்கை குறிப்பிலே எனது தாயாரிடத்திலே தான் முதன் முதலாக உண்மையான அன்பை, கருணையை, இரக்கத்தை, ஏழைகள் மீதுள்ள தனி அக்கறையை கண்டு கொள்ள முடிந்தது என குறிப்பிடுகிறார். ஆக்னெஸின் தந்தை மிகவும் பொறுமையும் திறமையும் மிகுந்தவர். குழந்தைகள் மீது தனி அன்பும் அக்கறையும் உள்ளவர். ஆக்னெஸுக்கு ஒன்பது வயது நடக்கும்போதே அவரது தந்தை பல மாதங்களாக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் துன்புற்று இறந்துவிட்டார். தந்தையின் இழப்பு குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்காத வண்ணம் குடும்பத்தின் முழுபொறுப்பையும் ஆக்னெஸின் தாயார்  த்ரானா ஏற்று செயல்படவேண்டிய கட்டாயம்.  குழந்தைகளின் படிப்பு அவர்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்ற ஏக்கமும் கலக்கமும் த்ரானாவை பாதிக்க, தன்னையும் தனது குழந்தைகளையும் கடவுளின் கரத்தில் ஒப்படைத்து ஒவ்வொரு நாளையும் ஆசீர்வாதமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனே தனது அன்றாடப் பணிகளை நிறைவேற்ற முனைந்து செயல்பட்டார்.

பள்ளி படிப்பு மற்றும் ஆன்மீகம்
          தனது குழந்தைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்ட த்ரானா அவர்களுக்கு வேண்டிய கல்வி, மறைபோதனை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொண்டு வளர வேண்டுமென்பதில் கருத்தாக இருந்தார். எனவே தனது குழந்தைகளை கிறிஸ்தவ நெறியிலும், மறையறிவிலும் வளர்க்க அருள்சகோதரிளால் நடத்தப்பட்ட பள்ளியைத் தேர்ந்தெடுத்து கல்வியிலும் ஒழுக்கத்திலும் வளர உற்சாகப் படுத்தினார். அதே சமயத்தில் ஆன்ம காரியங்களில் ஈடுபாடு காட்ட வேண்டுமென அக்கறை கொண்டிருந்தார். அதனால்தானோ என்னவோ, ஆக்னஸ் பங்கிலுள்ள பக்தசபை மற்றும் பாடல் குழுவில் சேர்ந்து இறைவனைப் புகழ்வதிலும், பிறர்நலச்சேவையில் ஆர்வம் காட்டிய போதும் அவரது அன்னை மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் கொடுத்தார்கள். அதே சமயம் ஏழைகள், அநாதைகள் மற்றும் ஆதரவில்லாதவர்களுக்கு உதவிசெய்யும் வகையில் இளம்பெண்கள் வின்சென்ட் தே பால் சபையின் உறுப்பினராக இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் அதிகமாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற பக்தசபைக் கூட்டங்களில் ஆர்வமாக கலந்து கொள்ளவும், அத்தகைய கூட்டங்களில் ஆசியாவிலிருந்தும் மற்ற மறைபரப்பு நாடுகளிருந்தும் பங்குதந்தைக்கு கிடைத்த கடிதங்கள் மற்றும் பத்திரிக்கைளில் வெளிவந்த நற்செய்தி அறிவிப்பு பணிக்கான ஆர்வமிகுந்த பணியாளர்களின் தேவைகளை மையப்படுத்திய கட்டுரைகளை வாசிக்கவும், அதற்கான விளக்கத்தை கேட்டுப் பெறுவதிலும் ஆக்னஸ் அதிக ஆர்வம் காட்டினார். மேலும் இளம் உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய அழைக்கப்பட்டபோது தாராளமாக தங்களின் ஒத்துழைப்பைக் கொடுத்தனர். அதில் ஆக்னேஸ் சிறப்பிடம் பெறுகின்றார். காரணம் தனது 12ம் வயதிலேயே ஒரு நற்செய்தி பணியாளராக மாற வேண்டும், இந்தியாவிலுள்ள பெங்கால் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும், சேவை புரியவேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்ததை தனது தாயிடமும், பங்கு தந்தையிடமும் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். மிகக் குறிப்பாக இயேசு சபை துறவியர் செய்துவந்த நற்செய்தி பணியினை தாங்கி வெளிவந்த மாத இதழ் கத்தோலிக்க மி­ன் என்ற புத்தகத்தை தவறாமல் படிக்கவும் அதனுடைய விளக்கத்தை தனது தாயிடமும், பங்குத்தந்தையிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

துறவு வாழ்வு
           
     இளம் வயதிலே இறையனுபவத்தால் துண்டப்பெற்று இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முன் வந்த ஆக்னேஸ், தனது தாயிடமும் பங்குத்தந்தையிடமும் தனது விருப்பத்தை தெரிவித்து, அவர்களின் வழிகாட்டுதலை எதிர்பார்த்தார். அத்தகைய வழிகாட்டுதலின்படி செயல்பட தயக்கம் ஏதுமின்றி துறவு வாழ்வை மேற்கொள்ளும் மன உறுதி பெற்றார். எனவே 1928 ம் ஆண்டு லொரேட்டோ சபை சகோதரியாக விருப்பம் கொண்டு இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த டப்னில் என்ற நகரில் உள்ள சபைத்தலைமை சகோதரிக்கு கடிதமும், ஒரு விண்ணப்பப் படிவமும் இணைத்து அனுப்பி வைத்தார். சில நாள்களுக்குள் சபைத்தலைமை அன்னையிடமிருந்து வரவேற்பு கடிதம் வர டப்ளினுக்குச் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவரது அன்னை மிகுந்த ஆனந்தத்துடன் வரவேற்று அனுப்பி வைத்தார். அங்கே ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேல் தங்கி ஆங்கிலம் மற்றும் துறவற சபைஒழுங்கு பற்றி தெரிந்து கொண்டு, பிறகு இந்தியாவில் மிகவும் குறிப்பிடப்படும் இடங்களில் ஒன்றான வங்கதேசத்திலுள்ள டார்ஜிலிங் என்ற பகுதிக்கு நவதுறவு பயிற்சிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஏறக்குறைய தேவையான தொடக்கநிலை பயிற்சிகள் அனைத்தும் முடித்து 1931 ம் ஆண்டு  ஆக்னஸ் தனது முதல் வார்த்தைப்பாட்டை கொடுத்து லொரேட்டோ சபையின் ஒரு அருள்சகோதரியானார். அப்போது தான் அருள்சகோதரி தெரசா என்று புனித குழந்தை தெரசாவின் வழியில் வாழ தனது பெயரை மாற்றி சபைதலைமைஅன்னையின் வழிகாட்டுதலுடன் துறவற வாழ்வை ஆரம்பித்தார். முதல் வார்த்தைப்பாட்டை கொடுத்த அருள்சகோதரி தெரசாவை லொரேட்டா சபையினர் நடத்தி வந்த கல்கத்தாவிலுள்ள என்டேலி என்ற இடத்திலுள்ள புனித மரியன்னைப் பள்ளியில் ஒரு ஆசிரியையாகப் பணிபுரியும் பொறுப்பேற்றார். இளம் அருள்சகோதரி தெரசா மிகுந்த ஆர்வத்துடன் கல்விப் பணிபுரிதலில் அக்கறை காட்டினார்கள்.

கல்விப்பணி
               ஏறக்குறைய 1937 ம் ஆண்டில் அருள்சகோதரி தெரசா தனது இறுதி வார்த்தைப்பாட்டை கொடுத்து தன்னை  லொரேட்டா சபையின் நிறந்தர உறுப்பினராக அர்ப்பணம் செய்தார். அதன்பிறகு அவர் பணியாற்றி வந்த பள்ளியிலேயே தொடர்ந்து கல்விப் பணியில் ஈடுபட பணித்தனர். மிகுந்த ஆர்வத்துடனும் பொறுமையுடனும் தனது பணியில் விருப்பங்கொண்ட அருள்சகோதரி தெரசா பள்ளி விடுமுறை நாள்களில் அருகாமையிலுள்ள ஏழைகள் வாழும் இடங்களுக்குச் சென்று இயன்ற அளவிற்கு உதவிக்கரம் நீட்டினார்கள். ஏழைகள், அநாதைகள் மற்றும் ஆதரவற்றோரின் நலனில் அக்கறை காட்டி செயல்பட்டார்கள். அந்த சமயங்களில் கல்விப்பணியை விட அதிகமாக ஏழைகளின் நலனில் அக்கறை காட்டுகின்ற செயல்களில் ஈடுபட பல நாள்கள் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானது. ஏனென்றால் ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் தான் அருள்சகோதரி தெரசாவால் இத்தகைய பிறரன்புப் பணிகளில் ஈடுபட முடிந்தது. வாரம் முழுவதும் பள்ளியிலும் விடுமுறை நாள்களில் ஏழைகளுக்கு பணிபுரிகின்ற செயல்களிலும் ஆர்வம் காட்டியபோது அவரது உள்ளத்தில் ஏழைகளுக்கு உதவிபுரிய ஒருவாரம் வரை காத்திருக்க வேண்டுமா? நோயினால் துன்புறுவோருக்கு ஆறுதல் தர ஏழு நாள்கள் வரை காத்திருக்க முடியுமா? என்ற பலவிதமான கேள்விகள் அவரது உள்ளத்தைத் துளைத்தன. அதே வேளையில் பள்ளியில் பணிபுரிகின்ற நிலையில் நோயினால் துன்புறுகின்ற ஏழைகளின் தேவைகளில் மருந்து, மாத்திரை வேண்டுமென்று கேட்கிறவர்களுக்கு எந்த விதத்திலும் பண உதவியோ, பொருள் உதவியோ செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் அவரது துறவற வாழ்வைச் சிந்திக்க வைத்தது.

இரயில் பயணம்
    துறவற வாழ்வை மேற்கொள்பவர்கள் கட்டாயம் ஒவ்வொரு ஆண்டும் ஒருவாரம் அல்லது பத்து நாள்கள் தியானம் செய்து இறைஉறவில் நிலைத்து வாழ வாய்ப்புகள் கிடைப்பது உண்டு. அந்த வகையில் 1946 ம் ஆண்டு செப்டம்பர் 10ம் நாள் அருள்சகோதரி தெரசா தனது ஆண்டு தியானத்தில் பங்கேற்பதற்காக டார்ஜிலிங் நோக்கி இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தான் அவரது உள்ளத்தின் ஆழத்தில் இயேசுவின் அழைப்பின் குரலை கேட்க முடிந்தது. அந்தக் குரல் அருள்சகோதரி தெரசாவை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. அழுகின்ற ஏழையின் குரல் இயேசுவின் குரலே என அருள்சகோதரி தெரசா மட்டுமே உணர முடிந்தது. எனவே, தான் செய்து வந்த கல்விப்பணியை விட ஏழைகளுக்கு உதவிபுரிய வேண்டுமென்ற தனது விருப்பத்தையும் இயேசுவின் அழைப்பையும் குறித்து பெல்ஜிய நாட்டைச் சார்ந்த ஆன்மீகத்தந்தை அருள்பணி ஜெலட் வான் எக்சம் என்பவரிடத்திலும் கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயராக திகழ்ந்த பிரேயர் பெர்டினான்ட் என்பவரிடத்திலும் எடுத்துச் சொல்லி செயல்பட வழி தேடினார். அவரது ஆன்மீகத்தந்தையும் பேராயரும் அருள்சகோதரியின் எண்ணத்தையும் சிந்தனையையும் முதலில் மாற்றிவிட முயன்றனர் ஆனால் முடியாமல் போகவே வேறுவழி எதுவும் தெரியாத நிலையில், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாக இத்தகைய போராட்டம் அருள்சகோதரியின் உள்ளத்தை உடைக்க இறுதியாக பேராயரின் அனுமதியுடன் லொரேட்டோ சபையிலிருந்து வெளியேறி ஏழைகள் வாழுகின்ற தெருக்களில் வாழ அனுமதி பெற்றார்.  இறுதியாக 1948 ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் அருள்சகோதரி தெரசாவின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கண்டு அவர் கேட்டுக்கொண்டபடி செயல்பட அனுமதித்தார்.  எனவேதான் 1950ல் மி­னரிஸ் ஆப் சேரிட்டி என்ற சபையை ஆரம்பித்து அதன் வழியாக ஏழைகளைப் பற்றிய சிந்தனையிலும் அவர்களுக்கு செய்ய வேண்டிய சேவை பற்றிய அக்கறையிலும் ஆர்வம் காட்டினார் அருள்சகோதரி தெரசா. இப்படி பல்வேறு சேவைகள் வழியாக தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு துறவற வாழ்வில் மகிழ்வோடு செயல்பட முனைந்தார்.

பெங்காலி தெரசா
       அருள்சகோதரி தெரசா மிகத்துணிவுடன் 1928 முதல் 1948 வரை ஏறக்குறைய 20 ஆண்டுகள் தான் இருந்த சபையை விட்டு வெளியில் வந்து ஏழையோடு ஒரு ஏழையாக தன்னையே அடையாளப்படுத்தி ஆர்வம் குறையாத நிலையில் செயல்பட முனைந்தார். லொரேட்டா சகோதரியாகவே ஏழைகள் வாழும் தெருக்களில் தங்கி செயல்பட முடியாத நிலையை உணர்ந்த அருள்சகோதரி தனது பாதுகாப்பு, தான் செய்துவந்த கல்விப்பணி அனைத்தையும் விட்டுவிட்டு, பெங்கால் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்யும் ஒரு வேளைக்கார பெண் அணிந்துள்ள வெள்ளை நிற கதர் ஆடையை தனது ஆடையாகக் கொண்டு ஏழைகளுக்குப் பணிசெய்கின்ற ஒரு பணியாளாக தனது பணியைத் தொடங்கினார். இதற்கு தேவையான மருத்துவ பயிற்சியை பாட்னாவிலுள்ள மெடிக்கல் மி­ன் மருத்துவ பணிபுரியும் அருள்சகோதரிகளிடம் பெற்று கொல்கத்தாவிலுள்ள ஏழைகள் அதிகமாக வாழும் தெருக்களில் வாழ முடிவெடுத்த சகோதரி தெரசா தான் வைத்திருந்து வெறும் ஐந்து ருபாயோடு ஏழைகளுக்கு உதவிபுரிய முன்வந்தார்கள்.

       தொடக்க காலங்களில் அருள்சகோதரி தெரசாவிற்கு முழுமையான ஒத்துழைப்பை ஏழை மக்கள் கொடுக்காத போதும் மனம் தளராது தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் கிடந்த முதியோர், வறியோர், அநாதைகள், ஆதரவில்லாதவர்களை அரவணைக்கும் ஒரு தாயாக செயல்பட்டார்கள்.  அத்தோடு  அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த சிறுவர், சிறுமியருக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளைம், மதிப்பு கொடுத்து செயல்படும் மனநிலை, மற்றும் சுத்தமாக இருக்க வேண்டியதன்  அவசியத்தை தெரியப்படுத்தவும் அதன் வழியாக அந்த பகுதியில் வாழ்ந்து வந்த அனைத்து குழந்தைகளும் மிகுந்த மகிழ்வுடன் செயல்பட பல வழிகளில் அறிவுரை கொடுத்து நற்பண்புகளில் வளர ஆதரவாக இருந்தார்கள். இப்படி ஒரு அம்மாவைப் போன்று அன்புடனும் பாசத்துடனும் கவனிப்பும் அக்கறையும் பெற்றக் குழந்தைகள் அவரை அம்மா, அம்மா என்று அழைக்க ஆரம்பித்தனர். இப்படி சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் உணர்ந்த அம்மா தெரசாவை அந்த பகுதியில் வாழ்ந்து வந்த வறியோரும், முதியோரும் அம்மா  தெரசா, அம்மா  தெரசா என அன்பாக அழைக்கலாயினர். மேலும் அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பு கொடுக்கவும், அம்மா தெரசாவை ஆதரவில்லாத மக்களின் பாதுகாப்பாக கருதி மதிப்பளித்து செயல்படவும் ஆரம்பித்தனர்.

அன்னை தெரசா
               கல்கத்தா பகுதியில் வாழ்ந்து வந்த அனைத்து ஏழை மக்களையும் எந்தவித வேறுபாடுமின்றி நடத்தவும் மிகக் குறிப்பாக ஏழைகளுக்காக எல்லாவித உதவிகளைச் செய்வதிலும் ஆர்வம் காட்டினார் அன்னை தெரசா.  பல்வேறு நிலைகளில் மக்களின் தேவைகளை உணர்ந்த அன்னை தெரசா சமுதாயத்தில் உள்ள ஏழைகள் நோயினால் பாதிக்கப்பட்டபோதும், இறக்கும்போதும் அவர்களை கவனிக்கவோ, ஆதரவு காட்டவோ யாருமே இல்லாத  ஒரு சூழ்நிலையை கண்ணோக்கி  அவர்களை கவனிப்பதில் அக்கறை காட்டினார்கள். அந்த சமயத்தில் மக்களையும், ஏழைகளையும் பாதித்த ஒரு நோய் என்னவென்றால் அன்பு இல்லாமையே என்று அன்னை தெரசா நன்கு உணர்ந்திருந்தார். காரணம் அன்பின்றி பல குழந்தைகள், முதியோர், அநாதைகள் இறந்ததை அன்னை தெரசாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்னை தெரசா ஏழைகள், அநாதைகள் மற்றும் ஆதரவில்லாதவர்கள் கடவுளின் அன்பை, அரவணைப்பை பெற வேண்டுமென்பதில் கவனம் செலுத்தினார்கள். அதுவே அவர்களின் முதன்மையான பணியாகவும் இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. உலகில் பிறந்து வாழ்ந்து வரும் ஒவ்வொரு நபரும் இறைவனது படைப்பு. அப்படியயனில் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களிடமிருந்து அன்பை, அரவணைப்பை, பாசத்தை, நேசத்தை பெற துடிப்பதே மனிதனின் மாண்பு என்பதை அன்னை தெரசா உணர்ந்து, ஏழைகள் இறைவனின் இரக்கத்தை, மன்னிப்பை சுவைத்து மகிழ தங்களது வாழ்வை முழுவதையும் ஏழைகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தார்கள். கடவுள் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. ஏழைகள் மீது கொண்டுள்ள உண்மையான அன்னை தெரசா வெளிப்படுத்தி அனைத்து வகையான சேவைகளையும் இறைவனின் மகிமைக்காகவே செய்தார்கள். அன்னை தெரசா தன்னையே முழுவதுமாக இறைவனின் கரத்தில் ஒப்படைத்து இறைமகிமையைக் காண ஒவ்வொருநாளும் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்கள். காரணம் எளிமை, துVய்மை, தாழ்ச்சி போன்ற நற்பண்புகளில் வளர்ச்சியும் மாற்றமும் கண்டு செயல்பட துணிந்த ஒரு நிலைதான். எனவே தான் அன்னை தெரசாவும் எந்தவித வேறுபாடுமின்றி ஏழைகளுக்கு உதவிபுரிவதில் ஆர்வத்துடன் செயல்பட முடிந்தது.

பிறரன்புச் சேவைகள்

     அன்னை தெரசா தனது வாழ்வு முழுவதையும் ஏழை எளியவரின் நலனில் அக்கறை காட்டுவதையே நம்பி செயல்பட்டார்கள். அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட துறவற சபையில் உறுப்பினராக சேர்ந்து பணியாற்ற விரும்புவோர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய வார்த்தைப்பாடுகளுடன் இணைந்து நான்காவது வார்த்தைப்பாடான முழு உள்ளத்தோடு ஏழை எளியவருக்கு இலவசமாகப் பணிபுரியக் கூடிய அர்ப்பணத்தை வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய அர்ப்பணம் இயேசுவின் மீது கொண்டுள்ள அன்பை, பிறரன்புச் செயல்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கியது. எனவேதான் அன்னை தெரசாவின் பிறரன்புச் சேவையை ஒரு சமூகப் பணி என சொல்லுவதை விட ஒரு ஆன்மீகப் பணி அல்லது துறவறப் பணி எனக் குறிப்பிடுவது சிறந்தது. துறவறப் பணி என்பது நற்செய்தி அறிவிப்பு எனலாம். காரணம் எப்படிபட்ட ஒரு நபராக இருந்தாலும் சமூகப்பணி செய்யலாம் ஆனால் அர்ப்பண வாழ்வு மற்றும் துறவற வாழ்வில் இயேசுவின் அன்பை முன்னிலைப்படுத்தி முழுமையாக தனிநபருடைய வாழ்வை அர்பணமாக்கும் வாழ்வுதான் துறவற வாழ்வு. இத்தகைய துறவற வாழ்வு இயேசுவின் மீதுள்ள உண்மையான அன்பை வாழ்ந்து காட்டுவதை மையப்படுத்தியது. அதே சமயத்தில் இயேசுவுக்கு அருகாமையில் செல்ல வேண்டுமெனில் ஒவ்வொரு நபரும் அன்றாட வாழ்வில் ஏழைகளுக்கு அருகாமையில் செல்லும் போது தான் இயேசுவுக்கு அருகாமையில் செல்ல முடியும் என்பதை தனது சேவைகள் மூலம் அன்னை தெரசா எடுத்துரைத்தார்கள்.அன்னை தெரசாவின் அனைத்து பிறரன்புப் பணிகளும் இயேசுவுக்கு செய்கின்ற பணி என்பதை எண்பித்துக் காட்டினார்கள். ஆண்டவர் இயேசுவையே மையப்படுத்தி வாழ்ந்தார்கள். எனவே தான் அன்னை தெரசா செய்த அனைத்து பிறரன்புப் பணிகளையும் ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணி என்று சொன்னால் மிகையாகாது.

    இத்தகைய பிறரன்புப் பணிகளை செய்வதற்கு தேவையான ஆற்றலை இயேசுவிடமிருந்தே பெற்றுக்கொண்டார்கள். இதை இறைவார்த்தையின் பின்னனியில் சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு செய்ததையயல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25.40), நான் தாகமாயிருக்கிறேன் (19.28) என்பதை இயேசுவின் அழைப்பாக உணர்ந்து செயல்பட்டார்கள். துன்பப்படுகின்ற ஒவ்வொரு நபரிலும் அன்னை தெரசாவால் மட்டுமே அது இயேசுவின் குரல் என்பதை உணர முடிந்தது. இத்தகைய பிறரன்புச் சேவைகளை பல்வேறு வகையில் செயல்படுத்தினார்கள் (1) ஏழைகள் மற்றும் அநாதைகள் இல்லங்கள், (2) கைவிடப்பட்ட குழந்தைகள் காப்பகம், (3) தொழுநோயாளர் இல்லம், (4) முதியோர் இல்லம் என பல இல்லங்களை அரசு உதவியுடனும் பல்வேறு நல் உள்ளங்களில் ஆதரவுடனும் உருவாக்கி அவைகளில் ஏழைகளை, அநாதைகளை, விதவைகளை, கைவிடப்பட்டோரை, முதியோரை, நோயாளிகளை அரவணைக்கும் அன்புக் கரமாக அன்னை தெரசா செயல்பட்டார்கள். இப்படிபட்ட அனைத்து வகையான பிறரன்புப் பணிகளும் ஆண்டவர் இயேசுவின் மீதுள்ள அன்பை உண்மையாக்குகின்ற செயல்களாக வெளிப்படுத்தினார்கள். இப்படிபட்ட இரக்கச் செயல்களில் அன்னை தெரசா ஆர்வத்துடன் இணைந்து செயல்பட்டதை கண்டு ஏறக்குறைய 124 வகையான பரிசுகளை உலகின் பல பகுதிகளிலிருந்தும் அளித்து அன்னையின் பிறரன்புச் செயல்களை கண்டுகொண்டனர் .
               
     பிறரன்புபணியில் ஆர்வத்துடன் செயல்பட்டட அன்னை தெரசா 1997ம் ஆண்டு இறந்தார். அவரது அடக்கக் சடங்கையும் இறுதிச்சடங்கையும் இந்திய அரசு முன்வந்து நிறைவேற்றியது. இன்றும் புனித அன்னை தெரசாவின் மதர்அவுஸ்  உள்ள கல்கத்தாவிற்கு சென்றால் அன்னை தெரசா உள்ளே என்று பொறிக்கப்பட்டுள்ள சாதாரண மரத்தால் செய்யப்பட்ட எளிய சிறிய பலகை இருப்பதைக் காணமுடியும். அன்னை தெரசாவின் அன்புப் பணியை பார்த்து திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் 2003ம் ஆண்டு அருளாளர் நிலைக்கு உயர்த்தினார். எனக்கும் அன்று உரோமை புனித பேதுரு பேராலய வளகத்தில் திருந்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.  தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் 2015ம் ஆண்டு அன்னை தெரசாவை புனித நிலைக்கு  உயர்த்தினார். காரணம் புனித அன்னை தெரசாவின் அன்புச் சேவைகள் மூலம் உலகின் அனைத்து எல்லைகளுக்கும் ஆண்டவர் இயேசுவின் அன்பை எடுத்துச் செல்லும் உண்மையான கருவியாக அன்னை தெரசா விளங்கினார்கள்.

புனித அன்னை தெரசாவின் நற்செய்தி அறிவிப்பு முறை

       புனித அன்னை தெரசாவின் நற்செய்தி அறிவிப்புப் பணி இன்றைய தமிழக திருஅவையின் அவசியமான பணியாக அமைந்துள்ளதை உணர முயலவேண்டும். புனித அன்னை தெரசாவின் அன்பு வழிகளை பின்பற்றி வேறுபாடுகளையயல்லாம் கடந்து இயேசுவை மட்டுமே மையாமாகக் கொண்டு செயல்படுவதே இன்றைய திருஅவையின் அவசியம். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார் இன்றைய திருஅவைக்கு அவசியமானது மதமாற்றமல்ல மாறாக சொல், செயல், வாழ்வின் மூலம் கவர்ந்திழுக்கின்ற சாட்சிய நிலையை உள்ளடக்கியதுதான் புதியமுறை நற்செய்தி அறிவிப்பின் மையம். இத்தகைய சாட்சியமிகுந்த நற்செய்திப்பணியாற்றிய புனித அன்னை தெரசா கடைபிடித்த முறைகள் தனிநபர் சந்திப்பு, குடும்ப சந்திப்பு, ஏழை எளியவருடன் உடனிப்பு மற்றும் உரையாடல், எளிய வாழ்க்கை முறை, நோயாளருடன் உடனிருத்தல், தேவையிலிருப்போருக்கு உதவுதல், அன்பு மொழி, இதயமும் கரங்களும் இணைந்த செல்பாடு, இயேசுவின் அன்பை, இரக்கத்தை, கருணையை பகிர்ந்து வாழ்தல். இத்தகைய செயல்பாடுகள் மூலம் எல்லாவகையான வேறுபாடுகளையும் தாண்டி அன்னை தெரசாவால் இயேசுவின் அன்பை பகிர்ந்து வாழ முடிந்தது. எனவேதான் அன்னை தெரசா இவ்வுலகில் உயிர் வாழ்ந்த போதே நடமாடும் புனிதையாக அழைக்கப்பட்டார்கள்.

       இத்தகைய பல்வேறு பிறரன்புச் சேவைகள் மூலம் புனித அன்னை தெரசா ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்கள் என்றால் மிகையாகாது. அனைத்து பிறரன்புப் பணிகளுமே இயேசுவின்மேல் வைத்துள்ள அன்பை உண்மையாக்குகின்ற செயல்களாக அமைந்திருந்தன. அன்னை தெரசாவின் இத்தகைய பிறரன்புச் சேவைகள் மூலம் எத்தகைய மாற்றத்தை மையப்படுத்த விரும்பினார்கள் என்றால் அனைத்து விதங்களிலும் மனிதம் மாண்புற வேண்டும், கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் மாண்புடன் வாழ வேண்டும், துன்புறுகின்ற ஏழை எளியவரில் இயேசுவின் முகத்தைக் காணவேண்டும், மனித சமுதாயத்தில் வேறுபாடுகளை கடந்து மதம், இனம், மொழி என்ற பாகுபாடுகளை கடந்த மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்க முயன்றார்கள். இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருஅவையில் திருமுழுக்கு பெற்றுள்ள நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே நாம் ஒவ்வொருவரும் இன்றைய நவீன உலகில் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கின்ற உண்மையான தூதுவர்களாக செயல்பட புனித அன்னை தெரசா நம் அனைவருக்கும் சிறந்த ஒரு மாதிரி. நமது வாழ்வில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க தேவையானது உண்மையான, எதார்த்தமான மனநிலை. இத்தகைய உண்மையான மனநிலை எல்லா மனிதரையும் அரவணைக்க, அன்பு செய்ய, ஏற்றுக்கொள்ளக் கூடிய, இயேசுவின் அன்பை அறிவிக்க தேவையான துணிவைத் தரக்கூடியது. ஏறக்குறைய 1950ல் கொல்கத்தாவின் பகுதிகளில் சுற்றி வந்த அன்னை தெரசாவுக்கு பல வழிகளில் துன்பங்களும், இன்னல்களும் இருந்தன. அவற்றை வெற்றி கொள்ளக்கூடிய ஆற்றல் தனது செபத்தின் மூலம் இறையனுபத்தின் மூலம் பெற்றுக் கொண்டார்கள். நாம் வாழ்ந்து வருகின்ற நமது குடும்பங்களில், பங்கில், சமுதாயத்தில் எளிய, இனிய, அன்புகலந்த வார்தைகள் நமது உரையாடலில் உறவில் வெளிப்படும் போது மிகக் குறிப்பாக ஏழை, எளியவரை, அநாதைகளை ஆதரவில்லாதவர்களை அரவணைத்து ஆதரவுக் கரம் தருகின்ற போது இயேசுவின் நற்செய்தியை அறிவித்த அன்னை தெரசாவின் வழியில் நாமும் இணைகின்றோம், இயேசுவை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடியவர்களாத் திகழ்கின்றோம். இன்றைய தமிழக திருஅவை சாட்சிய வழிகளில் வளர துணைபுரியக் கூடிய பல்வேறு முறைகளை கற்றுக்கொண்டு இயேசு மையப்படுத்திய செயல்களில் ஆர்வம் காட்ட முயல்வதே இன்றைய நற்செய்தி அறிவிப்பின் அவசியமும் தேவையுமாக  உள்ளது.


Communion to the Sick


நோயில் துன்புறுவோருக்கு நற்கருணை வழங்கல்

பணி : தந்தை மகன் தூய ஆவியார் பெயராலே - ஆமென்

பணி : ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக…. 
            உம்மோடும் இருப்பதாக    (தீர்த்தம் தெளித்தல்…. )

மன்னிப்பு வழிபாடு

பணி : அன்புக்குரியவர்களே இந்த திருச்சடங்கில் நாம் தகுந்த உள்ளத்துடன் 
             பங்குபெற நமது பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்

 எல்லாம் வல்ல இறைவனிடமும்………………. மன்றாடுகிறேன்.

பணி : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை 
              மன்னித்து நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச்செல்வாராக.

இறைவாக்கு வழிபாடு

யோவான் எழுதிய நற்செய்திலிருந்து வாசகம்   (6 : 54-55)

எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்.
-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

திருவிருந்து

பணி : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தபடி நாம் ஒருமித்து   
            நமது  சகோதரருக்காக மன்றாடுவோம்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தரதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

பணி :      இதோ இறைவனின் செம்மறி இதோ உலகின் பாவங்களை 
                போக்குகின்றவர்   செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றவர்
                பேறுபெற்றவர்..
                            ஆண்டவரே…. …… ……. என் ஆன்மா குணமடையும்.

மன்றாடுவோமாக: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா எம் சகோதரர்…. (சகோதரி… ) உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடலை உட்கொண்டுள்ளார். இது அவருடைய உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருந்தாகி நற்பயன் அளிப்பதாக. இதனால் இவர் விரைவில் உடல் நலம் பெற்று உமது திருவுளத்தை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

பணி : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
உம்மோடும் இருப்பாராக
பணி : எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை
            நிறைவாக ஆசிர்வதிப்பாராக.  – ஆமென்.

Christmas in Liturgy

     மனித வரலாற்றில் ஒரே ஒருவரின் பிறந்த நாள் மட்டுமே பெரு விழாவாக எல்லாக் காலத்தவராலும்> எல்லா நாட்டவராலும்> எல்லா மொழியினராலும்> எல்லா இனத்தவராலும் கொண்டாடப்படுகின்றது. அது தான் கிறிஸ்துவின் பிறப்பு - கிறிஸ்மஸ் பெருவிழா. காரணம் மற்ற மனிதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றில் தோன்றியவர்கள் ஆனால் கிறிஸ்துவோ கால வரலாற்றை தோற்றுவித்தவர் அவரது பிறப்பை வைத்து தான் காலமும் கி.மு கி.பி எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
ஓவ்வொரு மனிதனின் வாழ்கையிலும்> மதத்திலும் பல்வேறு விழாக்கள் இடம் பெறுவது இயற்கையே! கிறிஸ்துவத்தில் எந்த விழா கொண்டாப்பட்டாலும் அது திருப்பலியுடன் இணைந்து கொண்டாடுவதே சிறந்தது நல்லது. ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் நாம் கொண்டாடும் மாபெரும் விழா கிறிஸ்மஸ். இதை ஒவ்வொரும் கொண்டாட ஆசிப்பதும் விரும்பதும் இயற்கையானதே. திருச்சபையின்; வரலாற்றில் கிறிஸ்மஸ் விழாவில் மட்டும் தான் மூன்று விதமான திருப்பலிகள் நிறைவேற்றி கொண்டாட திருச்சபை பணிக்கிறது மற்ற எந்த விழாவுக்கும் இத்தனை சிறப்பு இல்லை.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

திருச்சபையின் வரலாற்றில் மிகவும் குறிப்பாக திருவழிபாட்டு நிலையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை கண்ணோக்கினால் மூன்று வகையான திருப்பலியுடன் கொண்டாப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இப்படி மூன்று திருப்பலிகள் மாலை> நள்ளிரவு மற்றும் விடியற்காலம் என மூன்று ntt;;வேறு நேரங்களில் கொண்டாப்படுகிறது. இத்தகைய வழக்கம் ஏறக்குறைய 5ம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறமுடியும். ஏனென்றால் 5ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட திருப்பலி புத்தகங்களான ஜெலாசியன் வெரோனா போன்ற திருப்பலி புத்தகங்களிலும் அதை தொடர்ந்து 6ம் நூற்றாண்டுகளில்; பயன்படுத்தப்பட்ட கிரகோரியன் திருப்பலி புத்தகத்திலும் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் திருப்பலி போன்று மூன்று வகையான திருப்பலிகள் இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது.

இந்த மூன்று திருப்பலிகளும்; வௌ;வேறு வகையில் முக்கியத்தும் பெறுகிறது. முதல் அல்லது மாலைத் திருப்பலி வானதூதர்கள் திருப்பலி என்றும் இரண்டாம் அல்லது நள்ளிரவுத் திருப்பலி ஆட்டு இடையர்கள் திருப்பலி என்றும் விடியற்கால திருப்பலி வார்த்தை மனுவானர் திருப்பலி  என்றும் அந்தந்த திருப்பலியில் பயன்படுத்தப்படும் நற்செய்தி வாசகங்களை மையப்படுத்தி அழைக்கப்படுகிறது. இந்த மூன்று திருப்பலிகளும் முறையே 4> 5> 6 நூற்றாண்டிடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது. அதோடு புனித தாமஸ் அக்குவினாசின் கூற்றுப்படி மூன்று வகையான நிலையில் யேசுவின் பிறப்பை திருச்சபை கொண்டாடுகின்றது...
1) உடலோடு சதையோடு பிறந்தது>
2) ஒரு கால வட்டத்திற்குள் பிறந்தது>
3) உலக முழுமைக்கும் பிறந்தது
         என்று யேசுவின் பிறப்பை வகைப்படுத்துகிறார்.
     
திருச்சபையின் வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்; போது 4 முதல் 6 வரை உள்ள  நூற்றாண்டுகளில் கத்தோலிக்கம் வளர்ச்சியடைந்து வளர்ந்து வந்தநிலை. மிகவும் குறிப்பிட கூடிய நிலையில் உரோமையில் முக்கியமான மூன்று பேராலயங்கள் உருவாக்கப்பட்டு கிறிஸ்துவின் மறையுண்மைகள் கொண்டாடப்பட்டது.

1) மரியன்னை பேராலயம்>
2) Gdpj NgJU பேராலயம்>
3) புனித Nahthd;; பேராலயம்.

இந்த மூன்று பேராலாயங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களாக இன்றும் கருதப்படுகின்றன. கிறிஸ்துமஸ் நாளில் இந்த மூன்று இடங்களிலும் திருந்தந்தையின் தலைமையில் மாலை> நள்ளிரவு> விடியற்கால திருப்பலி என கொண்டாப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. ஏறக்குறைய 7ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு இதுபோல மூன்று திருப்பலிகள் கிறிஸ்மஸ் பெருவிழா நாளில் நடந்தது வழக்கமாக உள்ளது. அதே நிலையில் தான் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழாவன்று மூன்று வகையான திருப்பலிகளை நிறைவேற்ற திருச்சபை நம்மை பணிக்கிறது. இதன் அடிப்படையில் தான் இன்றும் பல இடங்களில் இதுபோல மூன்று திருப்பலிகள் நடைபெறுகின்றன. ஆனால் நள்ளிரவுத் திருப்பலிக்குத்தான் அதிகமான மக்கள் வருகை தந்து பங்கேற்பது குறிப்பிடக்கூடிய ஒன்று. கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் பிற சபையை சார்ந்தவர்களும் நள்ளிரவுச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை இன்றைய நாட்களில் கொண்டாடி மகிழ்வதைக் காணமுடிகிறது.

Saints in Liturgy

திருவழிபாட்டில் புனிதர்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை
  
        

         புதியதாக குழந்தை பிறந்தாலோ அல்லது புதியதாக கிறிஸ்தவ ஆலயங்கள் அல்லது நிருவனங்கள் உருவாக்கப்பட்டாலோ எந்த புனிதருடைய அல்லது புனிதையினுடைய பெயரை தேர்ந்தெடுப்பது அல்லது சூட்டுவது என சில சமயங்களில் குழம்பி விடுவோம் அல்லது எதற்கு புனிதர்களுடைய பெயரை சூட்டவேண்டும் தேவையில்லை என்ற நிலையும் வந்துவிடும். காரணம் அத்தகைய புனிதர்களின் பாதுகாப்பும், இறைநம்பிக்கையும் நமக்கு தேவை என்பதை நினைவு படுத்தி இறைபாதுகாப்பில் வளர புனிதர்களின் துணையை நாடுகிறோம். ஏனென்றால் எந்த ஒரு புனிதரும் விண்ணிலிருந்து வந்தவரல்ல மாறாக நம்மைப்போல் மனிதர்களாக பிறந்து, வாழ்ந்து, இறைவல்லமையில் திலைத்திருப்பவர்கள். அவர்களது வழிமுறை, வாழ்க்கைமுறை நமக்கு ஒரு சிறந்த துணையாக இருக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் மையப்படுத்தி ஏன் புனிதர்களை நினைவு கூறவேண்டும் என்பதை திருச்சபையின் வரலாற்று மற்றும் இறையியல் பின்னனிகளோடு புரிந்து கொள்ள முயல்வோம்.

சொல் விளக்கம்

        “புனிதர்” என்ற வார்த்தையின் பொருள் விளக்கம் காண மூலமொழிச் சொற்கள் மூலம் சொல் விளக்கம் காண முயல்வதே சிறந்தது. புனிதம் அல்லது புனிதர் என்பதை எபிரேய மொழியில் “குவதோஸ்” என்றும் கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு “பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “வேறுபடுத்தப்பட்ட” என்று வார்த்தையளவில் பொருள்கொள்ள முடியும். இதே நிலையில் தான் தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் புனிதம் என்பது கடவுளை குறிக்கக்கூடிய சொல்லாகவும், கடவுளை வழிபட பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருள்களையும், இடங்களையும் குறிக்கக் கூடியதாகவும, கடவுளை மட்டுமே சார்ந்ததாகவும் கருதி வந்தனர். மிகக்குறிப்பாக இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்தவர்கள் அனைவரையும் தொடக்க கால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. இன்னும் சிறப்பாக புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களை புனிதர்கள் என்று அழைத்துள்ளதை 1பேதுரு 2. 9 “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்” என்று காணமுடிகிறது. இந்த நிலை இயேசுவுக்குள் திருமுழுக்கு பெற்றுள்ள அனைவரையும் புனித நிலைக்கு உயர்த்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது. இப்படி வார்த்தையின் பொருள் புரிந்துகொண்ட பிறகு அதனை தொடர்ந்து வரக்கூடியவைகளை புரிந்துகொள்வது எளிதாகும்.


யார் புனிதர்? 


         தொடக்க கால திருச்சபை மிக்குறிப்பாக வேத கலாபனை காலத்தில், இயேசுவுக்காக துன்ப துயரங்களை அனுபவித்து, தங்களது உயிரை துறந்த அனைத்து கிறிஸ்தவர்களையும் புனிதர்கள் என்றே தொடக்க நிலையில் அழைத்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து வந்த காலக்கட்டங்களில் யேசுவின் வார்த்தைகளை கடைபிடித்து யேசுவின் துன்பத்தை, போதனையை, வாழ்க்கையை தங்களது வாழ்க்கை சூழ்நிலைகளில் பின்பற்றி கடவுளையும் மற்றவரையும் அன்பு செய்து அத்தகைய அன்பை செயல்களில் வெளிப்படுத்தி வாழ்ந்தவர்களை புனிதர்கள் என்று திருச்சபை அழைத்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்தவரில் இயேசுவைக் காண துடித்த பல நலல் உள்ளங்கள்  மிகக்குறிப்பாக உடல் நோயால் துன்புறுவோரில், ஏழைகளில், நோயாளிகளில், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்ட கடும் தவம் செபம் நோன்பால் யேசுவுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் என இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். எப்படி இருப்பினும் யேசுவின் வார்த்தைகளை, செயல்களை ஏதாவது ஒரு சில வழிகளில் கடைபிடித்து கடவுளின் அன்பை மற்றவரும் அனுபவித்து மகிழ துணைபுரிந்தவர்களே புனிதர்கள் என திருச்சபை அவர்களது மரணத்திற்குப் பிறகு சிறப்பித்து அழைக்கிறது. இத்தகைய நிலை தங்களுக்கு தாங்களாகவே கொடுத்துகொண்ட ஒன்றல்ல, மாறாக புனிதம் என்பது கடவுளின் கொடை. இவ்வுலக வாழ்க்கை நிலையில் மற்றவரும் கடவுளின் அன்பை பெற்று மகிழ துணைபுரிந்தவர்களை திருச்சபை அவர்களது இறப்பிற்கு பிறகும் நினைவு கூர்ந்து அவர்களை சிறப்பாக புனிதர்கள் என்ற பெயரில் அழைக்கிறது. ஏனெனில் எல்லா கிறிஸ்தவரும் இத்தகைய புனித நிலைக்கு உயர்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறது.

திருச்சபை வரலாற்றில் புனிதர் வணக்கம்


      முதலாம் நூற்றாண்டுகளில் புனிதர்களைப்பற்றியும் அவர்களுக்கு செலுத்தப்பட்ட வணக்கம் பற்றியும் தெளிவான கருத்துகள் இடம் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் ஏறக்குறைய 155 அல்லது 156 ம் ஆண்டுகளில் இருந்து புனிதர்களுக்கான சிறந்த வணக்கம் நடந்துள்ளதற்கான ஆதார சான்றுகள் உள்ளன. மிககுறிப்பாக மறைசாட்சியான சுமிர்னா நகர் ஆயர் போலிகார்ப் அவர்களின் எலும்புகளை கிறிஸ்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் மாற்றி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவர் இரத்தம் சிந்தி இறந்த நாளை இறைமகிமைக்கு உயர்தப்பட்ட பிறந்த நாளாக கொண்டாடியதை திருச்சபையின் வரலாற்று ஏடுகள் சான்று பகர்கின்றன. அதோடு மற்றுமொரு சான்று புனித சிப்பிரியன் (250) குருக்களுக்கு எழுதிய தனது கடிதத்தில் “கிறிஸ்துவுக்காக உயிர்தியாகம் செய்தவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அவர்களின் நினைவு நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் தவறாது கிறிஸ்தவர்கள் அவர்களின் கல்லறைகளில் ஒன்றுகூடி செபிக்க” அழைப்பு விடுத்துள்ளார்.


              இந்த நிலையில் தான் புனிதர் வணக்கம் தொடக்க கால திருச்சபையில் சிறப்பு பெற்றுள்ளதாக காண முடிகிறது. இத்தகைய புனிதர் வணக்கம் மறைசாட்சியர் மற்றும் மறைஆயர்களுக்கு என்று அவர்கள் வாழ்ந்து இறந்த மறைமாவட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. மறைசாட்சியர் என்பது “மார்த்தீரோன்” என்ற கிரேக்க வார்த்தயிலிருந்து வந்தது. இதற்கு “இரத்தம் சிந்தி கிறிஸ்துவுக்காக உயிர்தியாகம்” செய்தவர் என்று பொருள். இத்தகைய நிலையில் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த புனிதர்களின் இறந்த நினைவுநாளில் தொடக்ககால திருச்சபை அவர்களது கல்லறைகளில் ஒன்று கூடி அவர்களோடு இணைந்து கடவுளுக்கு தங்களது செபங்களை அர்ப்பணித்ததை காணமுடிகிறது. அதோடு ஒரு குறிப்பிட்ட மறைமாவட்டத்தின் ஆயர் இறந்த ஆண்டு நினைவு நாளில் கிறிஸ்தவர்கள் ஆயரது கல்லறையில் ஒன்றுகூடிவந்து செபித்து தங்களது ஒன்றிப்பை அர்ப்பண செபங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி ஒவ்வொரு மறைமாவட்டமும் தனித்தனியாக இறந்த மறைசாட்சிகளை, மறை ஆயர்களை நினைவு கூர்ந்து ஒன்றுகூடி செபித்து வந்துள்ளது. இத்தகைய விழாக்களை நினைவு தினங்களாகவும் மேலும் இதைத் தொடர்ந்து இயேசுவுடன் வாழ்ந்து இறந்த திருத்தூதர்களின் இறப்பை திருவிழாவாகவும் கொண்டாடும் பழக்கம் ஏறக்குறைய 3-ம் நூற்றாண்டுகளிலிருந்து நடைமுறையில் இருந்துள்ளது.


உரோமையில்

           ஏறக்குறைய 2-ம் நூற்றாண்டுகள் வரை உரோமை நகரில் புனிதர் வணக்கம் சிறந்த நிலையில் இருந்ததாக சொல்லமுடியாது மாறாக குடும்ப அல்லது உறவினர்கள் என்ற அளவிலேயே இருந்துள்ளது. ஆனால் திருத்தந்தை இரண்டாம் சிக்டஸ் (258) மற்றும் அவருடன் 6 திருத்தொண்டர்கள் நெருப்பிலிடப்பட்டு மறைசாட்சிகளாக இறந்த பிறகு கிறிஸ்தவர்கள் சிறப்பாக அவர்களது கல்லறைகளில் ஒன்றுகூடி செபித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய உரோமையில் 313 க்கு பிறகு தான் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து இறந்தவர்களின் கல்லறைகளின் மேல் மறைசாட்சிகள் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. காரணம் 3-ம் நூற்றாண்டுகள் வரை வலேரியன் கொடுமைகளில் கிறிஸ்துவர்கள் அதிகமாகவே கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர் உயிர் தியாகம் செய்யும் நிலை அதிகமாகவே இருந்துள்ளது. மற்றொரு காரணம் கிறிஸ்தவம் ஒரு மதமாக அங்கிகரிக்கப்பட்ட பிறகு தான் இத்தகைய கொடுமைகள் தளர்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஏறக்குறைய 3-ம் நூற்றாண்டுகளிலிருந்து புனிதர் என்பது இயேவுக்காக இறந்த ஒரு நபருக்கு பொருந்தக்கூடிய நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை காண முடிகிறது. இப்படி இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர்தியாகம் செய்த நபர்களின் இறந்த நினைவு நாளே அவர்களது விண்ணகப் பிறப்பின் நாளாக கருதி அன்றைய தினம் அவர்களது கல்லறைகளில் ஒன்றுகூடி இறைவார்த்தை பகிர்விலும, திருவிருந்து பகிர்வு கொண்டாட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதை தொடக்க கால திருச்சபை வரலாற்று ஏடுகள் எடுத்துரைக்கின்றன.


          ஏறக்குறைய 5 மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் வேரிட்டு வளர்ந்து வந்த கால கட்டம் ஒவ்வொரு கிறிஸ்துவ சமூகத்திலும் இத்தகைய மறைந்த மறைசாட்சிகளின் எண்ணிக்கையும் மறைஆயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. எனவே பல இடங்களில் மறைசாட்சிகளின் நினைவை மட்டும் கொண்டாடடினால் போதும் என கிறிஸ்தவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 10-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய புனிதர்களின் பட்டியலை தொகுத்து ஒருங்கிணைந்த உரோமை புனிதர் பட்டியலை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏறக்குறைய 11-ம் நூற்றாண்டில் இருந்த திருத்தந்தை 7-ம் கிரகோரி புனிதர்களை மறைசாட்சிகள்; மற்றும் மறைஆயர்கள் என இரண்டாக வகைப்படுத்தினார். இந்த காலக்கட்டத்தில் தான் புனிதர்களின் மன்றாட்டு (பிராத்தனை) திருச்சபையில் உருவானது. பல புனிதர்களின் பரிந்துபேசுதலை நினைவு கூறும் வகையிலும், தனிப்பட்ட புனிதரை நினைவு கூறும் அளவிலும் இத்தகைய மன்றாட்டுகள் இ;டம் பெற்றன. ஏறக்குறைய திரிதெந்தின் சங்கம் (15-ம் நூற்றாண்டுகள்) வரை உரோமை புனிதர்களின் பெயர் பட்டியல்படி புனிதர்களின் எண்ணிக்கை 270 ஆகத்தான் இருந்துள்ளது. ஆனால் 17ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கிறிஸ்தவருக்கு அவரது இறப்பிற்கு பிறகு கொடுக்கப்படுகிற சிறந்த இந்த புனித நிலையை நிர்ணயிக்கும் உரிமையை திருத்தந்தைக்கு உரிய அதிகாரமாகவும், ஒரு நபரை அவரது இறப்பிற்கு பிறகு அவர் வாழ்ந்து வந்த நிலை, அவரது போதனை, கடைபிடித்து வந்த நற்பண்புகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் உறுதி செய்யப்பட்டது.


           இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் மீண்டும் இந்த உரோமைப் புனிதர்களின் பெயர் பட்டியலை முறைபடுத்தியது. மிகக் குறிப்பாக அகில உலக கிறிஸ்தவர்களின் தேவையை மையப்படுத்த முயன்று பல புனிதர்களின் பெயரை நீக்கியும், சில புனிதர்களின் பெயர்களை சேர்த்தும் புதிய பட்டியலை உருவாக்கியது. மற்றும் புனிதர்களின் கொண்டாட்டங்களை 5 நிலைகளில் வகைப்படுத்தியது: மறைசாட்சியர், பெருவிழா, திருவிழா, நினைவு மற்றும் விருப்ப நினைவு என்று வழிபாட்டு நிலையில் கொண்டாட பணித்தது. இன்றும் நமது பங்கு ஆலயங்களில் உள்ள பலி பீடத்தில் ஏதாவது ஒரு புனிதர் அல்லது புனிதையரின் திருப்பண்டங்கள் பதிக்கப்படுவதும் தொடக்க கால திருச்சபை எவ்வாறு ஒரு குறிப்பிட்ட புனிதரின் இறந்த தினத்தன்று ஒன்று கூடி வந்து இறைவார்த்தை பகிர்விலும், திருவிருந்து பகிர்விலும் கலந்து கொண்டு இறைவனுக்கு புகழ் சேர்த்ததோ அதேபோல இயேசுவுக்குள் திருமுழுக்கு பெற்றுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் புனிதர்களோடு இணைந்து இறைவனுக்கு நன்றிபலி செலுத்த பலிபீடத்தின் முன் ஒன்றுகூடி செபிக்க பணிக்கப் படுகிறது. பல சமயத்தில் நமது பங்கு அல்லது நிறுவனத்தில் உள்ள பலிபீடத்தில் பதிக்கப்பட்டுள்ள அருளியக்கம் எந்த புனிதர் அல்லது புனிதையருடையது என்பதுமே தெரியாமல் இருந்து விடுகிறது.

புனிதர் வணக்கம் தேவையா ? தவறானதா?

   
     சில சமயங்களில் நமது கிறிஸ்தவ வழிபாட்டு செயல்களில் ஆர்வமில்லாமல் ஈடுபடும் போது ஏற்படும் நிலை தான் நாம் செய்வது சரியானதா? அல்லது தவறானதா? என்ற சந்தேக நிலைக்கு நம்மை தள்ளிவிடுகிறது. நம்முடைய வழிபாடுகள் மூலமாக கடவுளை மட்டுமே நாம் ஆராதிக்கின்றோம். மாறாக அன்னை மரியாவுக்கு செலுத்துவது உயர்வணக்கம் என்றும், மற்ற புனிதர்களுக்கு செலுத்துவது மரியாதை அல்லது வணக்கம் என்று திருச்சபை வரையறுத்து தந்துள்ளது. சில சமயங்களில் புனிதர் வணக்கம் குறித்து விவிலியத்தில் ஒன்றுமில்லையே அப்படியென்றால் நாம் செய்வது தவறு தானே என்று நம்மில் ஒருசிலர் நினைக்கக் கூடும். ஆனால் புனிதர் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல மாறாக புனிதர்கள் மூலம் இன்னும் நமது கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற துணைபுரிபவை என்று எண்ணுதல் சாலச்சிறந்ததாகும்.

1. ஓவ்வொரு புனிதரும் ஏதாவது ஒருவிதத்தில் கடவுளை பிறருக்கு வெளிப்படுத்தியவர்கள், அல்லது வாழ்ந்து காட்டியவர்கள். எனவே தான் திருப்பலியில் பயன்படுத்தப்படும் புனிதர்களின் தொடக்கவுரையில் “உம் புனிதர்கள் நடுவில் இறைவா நீர் புகழ்பெறுகிறீர்” என்று செபிக்கிறோம். கடவுளை பின்பற்றுதல் எளிதாக இருக்காது அதே வேளையில் நம்மைப் போல் மனிதராக வாழ்ந்து பல வழி நிலைகளில் கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து காட்டியவர்களது வழிமுறையை பின்பற்றுவது மனிதர்களாகிய நமக்கு எளிதாக தோன்றும்.

2. புனிதர்கள் கிறிஸ்துவ விசுவாசப்பயணத்தில் முன்மாதிரி எனவே தான் தொடக்க திருச்சபையிலிருந்து புனிதர்களின் பரிந்துரையை தேடி சென்றுள்ளனர்.

3. புனிதர்களில் வாழ்க்கை முறையை பின்பற்றி கடவுளை மகிமைபடுத்த மேற்கொள்ளும் முயற்சி. இதன் மூலம் நமது வாழ்வை நெறிபடுத்த துணைபுரியக்கூடியது.

4. புனிதர்கள் இயேசுவுடன் இணைந்து அவரது பாடுகள், மரணம், துன்பத்தின் மூலம் மரணத்தை தழுவி இறைவனுடன் இணைந்திருப்பவர்கள்.

5. கடவுளுடன் சிறந்த நிலையில் உறவு கொண்டு செயல்பட்டவர்கள். இறைவல்லமையை தங்களது வாழ்வில் உணர்ந்து கொண்டவர்கள்.

6. திருப்பலியில் நினைவுகூர்ந்து செபிக்கும் சபை மன்றாட்டில் இறைவனுடன் ஒரு தனிப்பட்ட புனிதர் எவ்வாறு சிறந்த உறவு கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது, நம்மையும் அத்தகைய ஒருசில நிலைகளில் செயல்பட அழைக்கிறது அல்லது தூண்டுகிறது.

7. தனிப்பட்ட புனிதர் பக்தி முயற்சியை நம்மில் உருவாக்குகிறது. அவர்களின் ஒருசில வாழ்க்கை முறைகளையாவது பின்பற்ற நம்மை உற்சாகப் படுத்துகிறது.

8. நமது கிறிஸ்துவ வாழ்வோடு நெருக்கம் கொண்டவர்கள் மற்றும் நமக்கு சிறந்த ஒரு முன் உதாரணமாக திகழ்பவர்கள் புனிதர்கள்.

9. நமது விசுவாசப்பயணத்தில் இறை நம்பிக்கையில் வளர துணை புரிபவர்கள்.

10. நற்செய்தி வார்த்தைகளை, வழிமுறைகளை தங்களது வாழ்வாக்கி நம்மையும் அத்தகைய நிலையில் வாழ, வளர, செயல்பட அழைக்கின்றனர்.


          திருச்சபையில் புனிதர்கள் இறை நம்பிக்கைக்கு முன்மாதிரியானவர்கள். எனவே தான் அவர்களது சாட்சிய வாழ்வை செயல்களை நினைத்து திருச்சபை அவர்களது இறப்பிற்கு பிறகு சிறந்த இடம் தந்து சிறப்பிக்கிறது. அவர்கள் மூலம் நமது வேண்டுதல் விண்ணப்பங்களை இறைவனிடம் சமர்பிக்க ஒரு வழியாக அமைந்தது. ஓவ்வொரு முறையும் வழிபாட்டு கொண்டாடங்களில் சிறப்பாக திருப்பலியில் புனிதர்களின் பெயரை உச்சரித்து ஒன்றுகூடி செபிக்கும் பழக்கம் உள்ளதை தொடக்க காலத் திருச்சபை சுட்டி காட்டி உணர்த்துகிறது.


         மண்ணில் வாழ்ந்து வரும் இந்த மனித சமூதாயம் புனிதர்களின் பரிந்துரையால் புனித வாழ்வில் பங்கு பெற அழைக்கப்படுகிறது. புனிதர்கள் வாழ்வில் கடைபிடித்து வந்த சிறந்த, உயர்ந்த ஆன்மீக வழிமுறைகளை திருவழிபாட்டு செபங்களில் நினைவுகூர்ந்து அருள் வழியில் வாழ, வளர நமக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இயேசுவை பின்செல்ல தூண்டுதலாக இருந்த இறைவார்த்தை அல்லது நற்காரியச் செயல்களை மையப்படுத்தி திருப்பலி செபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறைவனுடன் புனிதர்களுக்கு உள்ள உறவை புதுப்பித்து நமது கிறிஸ்தவ வாழ்வில் இறைவனோடும் அடுத்தவரோடும் உள்ள அன்புறவில் வளர துணைபுரிகின்றன. அதோடு எவ்வாறு ஒவ்வொரு புனிதரும் தங்களது வாழ்வால், செயலால் ஏதாவது ஒரு தனிpவிதத்தில் இறைவனுடன் உள்ள தனி உறவில் ஒன்றித்து வாழ துணைபுரிந்தது என்பதை கண்டுகொண்டு நம்மையும் ஏதாவது சில வழிநிலைகளில் இறைஉறவில் வளர துணை புரிகின்றன.


       நமது இந்திய மண்ணில் வாழ்ந்து இறந்த அன்னை தெரெசாவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களது நிறுவனங்களைப் போன்று எத்தனையோ நிறுவனங்கள் செயல்படுவதை அறிவோம். ஆனால் எத்தனை எதிர்ப்புகள் மத்தியிலும் அவர்களால் மட்டுமே சிறந்த ஒரு சேவையை செய்ய முடிந்தது என்றால் அது அவர்களது தனிசக்தியால் அல்ல மாறாக இறைசக்தியால் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தான் ஒரு முறை அன்னை தெரெசாவை பார்த்து ஒரு நாட்டின் அதிபர் கேட்டாராம் நீங்கள் இந்த நோயாளிகளின் புண்களை துடைத்து மருத்துவம் பார்க்கும் செயலுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை எனக்கு ஊதியம் கொடுத்தாலும் நான் செய்ய மாட்டேன் என்று சொன்னதற்கு அன்னை தெரெசா எனக்கு பத்து லட்சம் ரூபாய் வரை ஊதியம் கொடுத்தாலும் நானும் செய்ய மாட்டேன் ஆனால் இந்த துன்புறும் நபரில் நான் இயேசுவை காண்கிறேன் எனவே நான் இத்தகைய பணிகளை இயேசுவுக்காக செய்கிறேன் என்று பதில் தந்தார்களாம். இறைவனது அன்பு அடுத்தவரை மிகக் குறிப்பாக தேவையில் இருப்பவரை அன்பு செய்வதில் தான் நிறைவு பெறுகிறது. ஓவ்வொரு புனிதரும் ஏதாவது ஒரு வகையில் இப்படி இயேசுவின் மதிப்பீடுகளை தங்களது வாழ்வாக்கியவர்கள். எனவே தான் திருச்சபை அவர்களது இறப்பிற்குப் பிறகும் அவர்களது வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி இயேசுவின் சாட்சிகளாக வாழ, செயல்பட அழைப்பு தருகிறது.