FreeWebSubmission.com TO KNOW MORE.....: Way of the Cross - History

Way of the Cross - History

               சிலுவைப்பாதை : வரலாறும் போதனையும்
                                
இயேசுவின் பாடுகளை சிந்தித்து தியானிக்க திருச்சபை நமக்கு தந்துள்ள நாட்களே தவக்கால நாட்கள். இந்த நாட்களில் கிறிஸ்துவர்களாகிய நாம் மேற்கொள்ளும் மிகச் சிறந்த பக்தி முயற்ச்சிகளுள் ஒன்று தான் சிலுவைப்பாதை பக்தி முயற்சி. இந்த பக்தி முயற்சியில் பங்கு பெறும்போது இயேசுவின் துன்பத்தில் நாமும் பங்குகொண்டு நமது வாழ்வை முறைப்படுத்தி வாழ நமக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. திருச்சபை இந்த தவக்கால நாட்களில் சிலுவைப் பாதை பக்தி முயற்சியை கடைப்பிடித்து தனி,பொது வாழ்வில் மாற்றம் காண நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது. இந்த சிலுவைப்பாதை பக்தி முயற்சி எப்படி உருவானது வளர்ச்சி கண்டுள்ளது என்பதனை அதன் வரலாற்றுப் பின்னனியுடன் அறிந்து கொள்ள முயல்வோம்.

வரலாற்றுப் பார்வை

திருச்சபையின் ஆரம்ப காலக் கட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கு மிக முக்கியமான நகரங்களாக இருந்தது உரோமை மற்றும் பாலஸ்த{னம். ஏனென்றால் இயேசு பிறந்து வாழ்ந்த நகரம் பாலஸ்தீனம். இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறைந்த இடம் எருசலேம். அதே போல் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இயேசுவின் சீடர் பேதுரு உரோமை நகருக்குச் சென்று போதித்து மக்களை கிறிஸ்துவர்களாக மாற வழிகாட்டுகிறார். ஏறக்குறைய திருச்சபையின் ஆரம்ப காலக்கட்டத்தில் 4-5 நூற்றாண்டுகளில் தான் கிறிஸ்துவ மதம் காண்ஸ்டன்டைன் என்ற மன்னரால் அங்கிகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கிறிஸ்துவ மதத்தின் புண்ணிய பூமியான எருசலேமுக்கு திருப்பயணம் மேற்கொண்டு இயேசு பிறந்து வாழ்ந்த மற்றும் சிலுவையில் அறையப்பட்ட இடங்களை காண பல இடங்களிலிருந்து மக்கள் திருபயணம் மேற்கொண்டனர். மிக முக்கியமாக எருசலேம் நகர வீதிகளில் இயேசு சிலுவை சுமந்து சென்ற சாலைகளில் மக்கள் சேர்ந்து செபித்து,பாடல்கள் பாடி,யேசுவின் பாடுகளை சிந்தித்து வந்துள்ளதை திருச்சபையில் ஆரம்ப கால முதலே அறிய முடிகிறது.    
 

இதே காலக் கட்டத்தில் கிறிஸ்துவ விசுவாச நிலையை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு வகையான ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டு மக்களது பார்வைக்கு வைக்கப்பட்டது. காலஞ் செல்லச் செல்ல இத்தகைய அழகிய ஓவியங்களை கண்டு மக்கள் செபிக்கக்கூடிய நிலைகள் திருச்சபையில் உருவாயின. ஏறக்குறைய 6ம் நூற்றாண்டுகளில் இத்தாலிய நாட்டிலுள்ள பொலோனா என்ற இடத்தில் வாழ்ந்து வந்த புனித ஸ்டீபன் மடாதிபதிகள் எருசலேமை சித்தரிக்கக்கூடிய காட்சிகளையும் இடங்களையும் வரைந்து அதிலும் குறிப்பாக யேசுவின் பாடுகளை சித்தரிக்கூடிய ஓவியங்களை தங்களது இல்லத்திலே வரைந்து வைத்து யேசுவின் பாடுகளை தங்களது மடத்திலே சிந்திக்கலாயினர்.


அதே போன்று திருச்சபையின் ஆரம்ப காலத்திலே ஓவியம்,கலை,சிற்பம் மூலம் யேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை மையப்படுத்தி கிறிஸ்துவ ஆலயங்களிலும் அதன் சுற்றுப் புறமும் வைக்கப்பட்டு திருப்பயணிகள் பக்தியை கடைபிடித்து புனித இடங்களை சந்தித்து செபிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இத்தகைய நிலைகள் உரோமை மற்றும் எருசலேம் பகுதிகளில் அதிகமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த நிலையில் தான் சிலுவைப்பாதை பக்திமுயற்சியும் திருச்சபையில் உருவானது.


சிலுவைப்பாதை பக்தி முயற்சி உருவாக காரணமாக இருந்த இடம் புண்ணிய பூமியான எருசலேம் தான். ஏறக்குறைய 10ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் எருசலேம் நகரில் நல்ல சாலைகள் அமைத்து பக்தர்கள் பக்தியாக பாடல்கள் பாடி செபித்து செல்லக்கூடிய நிலை உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 1342 ஆண்டுகளில் புனித பூமியானது பிரான்சிஸ்கன் சபை துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு திருப்பயணிகளை கவரக்கூடிய வகையில் பக்திமுயற்சிகள் உருவாக்கப்பட கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலே குறிப்பிடப்பட்ட சாலைகளில் ஒரு சில காட்சிகளை சித்தரித்து குறிப்பாக அன்னை மரியாள் யேசுவை காணுதல், எருசலேம் நகர் பெண்களிடம் உரையாடுதல், சிமியோனை சந்தித்தல், படைவீரர்கள் யேசுவின் உடைகளை களைதல், சிலுவையில் அறைதல் போன்ற யேசுவின் பாடுகளை ஓவியங்களாகவும் சிற்பங்களாவும் வடிவமைத்துள்ளனர். 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகள் வரை 20 மற்றும் 30க்கும் மேற்பட்ட நிலைகளை உள்ளடக்கியதாக சிலுவைப்பாதை பக்திமுயற்சிகள் அமைந்திருந்தன. இதை 1462 ல் புண்ணிய பூமிக்கு திருப்பயணம்; மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டு “வில்லியம் வே” குறிப்பிட்டுக் காட்டுகிறார். அதோடு சித்தரிக்கப்பட்டுள்ள யேசுவின் பாடுகள் தியானிப்பதற்கு உதவியாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். 16ம் நூற்றாண்டுகளில் தான் “14” ஸ்தலங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்டது. 1686 திருத்தந்தை இன்னொசெண்ட் முக்கியமான மடாதிபதிகள் வாழும் இடங்களில் சிலுவைப்பாதை பக்தியைக் கடைபிடிக்க ஆணையிடுகிறார்.


திருத்தந்தை பெனடிட் (1726) ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்த பக்தி முயற்சியை மேற்கொள்ளவும் அதன் மூலம் பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணை பிறப்பிக்கிறார்.. அதன்பின் திருத்தந்தை கிளாமெண்ட் (1731)எல்லா கோயில்கள், பேராலயங்கள், திருத்தல வளாகங்கள், சிற்றாலயங்கள் கல்லறைத்தோட்டகளிலும்; இந்த பக்தி முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என கிறிஸ்துவ மக்களை பணிக்கிறர். அதன் அடிப்படையில் 17 ம் நூற்றாண்டுகளிலிருந்து இந்த பக்தி முயற்சி திருச்சபையில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது என்பதை உணரலாம்.  


சிலுவைப்பாதையின் போதனை


என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும் (மத் 16.. 24) என்பது இயேசு ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அழைப்பு.

சிலுவைப் பாதை வெறும் வெளிச்சடங்கல்ல:
பரிதாபப்பட்டு கண்ணீர் வடிப்பதற்குமல்ல:
மாறாக, நம் வாழ்வை சீர்தூக்கி பார்க்கும் வாய்ப்பு:
இறைவனுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு:


சிலுவைப்பாதை நம் வாழ்க்கைப் பாதையாக மாறும் போது நாம் ஒவ்வொருவரும் மறுகிறிஸ்துவாக மாற முடியும். இதற்காகக்தான், இறைவன் தன் மகன் இயேசுவின் மூலம் இத்தனை துன்பங்களை நாம் உணர்ந்து பங்கேற்க வாய்ப்பு தருகிறார்.

யூத மக்கள் சிலுவையை அவமானத்தின் சின்னமாகத்தான் கருதி கொலை பாதகர்களையும் நாட்டுத் துரோகிகளையும் தண்டிக்க பயன்படுத்தினர்.  இத்தகைய சிலுவை மரணம் ஒரு மனிதனுக்கு வாய்க்கின்ற அவலத் தீர்ப்பு தான். அவமானத்தின் சின்னமாகிய சிலுவை இயேசுவின் மரணத்தினால் மகிமை பெறுகிறது (1 கொரி 1. 18). இயேவின் சிலுவை வெற்றியின் சின்னம். மனுக்குலமனைத்திற்கும் பலியான மாசற்ற செம்மறி அதில் தொங்கி இறந்து நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்தார். இடறலாக கருதப்பட்ட சிலுவை மனித குலம் முழுமைக்கும் வாழ்வுப் பாதையாகவும் அவரது காயங்களாலே நாம் குணம் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது (1 பேதுரு 2. 24). எனவே தான் மனிதர்களுக்கு மடமையாக எண்ணப்பட்ட சிலுவைச் சின்னம் இயேசுவின் இறப்பினால் வாழ்வின் ஊற்றாக உருவெடுக்கிறது.


பாலைவனத்தில் கொள்ளிவாய் பாம்புகளால் கடியுண்டவர்கள் நலமடைய மோயீசன் வெண்கலப் பாம்பை கம்பத்தில் ஏற்றினார். அதை உற்று நோக்கிய அனைவரும் உயிர் பெற்றார்கள். (எண் 21. 9) அதே போன்று தான் இயேசுவின் சிலுவைச் சாவு மனித இனம் முழுவதிற்கும் அருள் வாழ்வை பெற்றுத் தருகிறது.

அதோடு சிலுவையிலே விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே தொங்குகிற இயேசு கடவுளையும் மனிதனையும் இணைக்கும் இணைப்பின் பாலமாக இருக்கிறார். படைப்பின் தொடக்கத்திலிருந்த உறவு நிலையில் ஏற்பட்ட விரிசலை இயேசு தனது உயிரை சிலுவையில் அர்ப்பணித்ததன் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கின்ற உறவுப் பாலமாகத் திகழ்கின்றார். பலியும் பலிப் பொருளுமாகிய இயேசு பலியாகப் போகும் கழுமரத்தை தானே சுமந்து சென்று தன்னுயிரைக் கொடுத்ததன் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கிறார்.

அதோடு சிலுவையிலே இயேசு மனிதனையும்-மனிதனையும் இணைக்கிறார். இயேசுவின் சிலுவையில் இருபக்கமும் இரு மனிதர்கள் அறையப்பட்டிருந்தனர். இதன் மூலம் மனிதனை மனிதனுடன் இணைக்கும் உறவின் பாலமாக இருந்து தன்னையே மனிதனுடன் ஒன்றிணைக்கிறார். சின்னஞ்சிறிய சகோதரனுக்கு செய்த உதவிகளை எனக்கே செய்தீர்கள். இயேசுவின் இறப்பால்; மனிதன் மனிதனுடன் இணைக்கப்படுகின்றான். ஏனென்றால் சிலுவையின் மகத்துவமே இறையன்பிலும் பிறரன்பிலும் இணைவதில் தான் அடங்கியுள்ளது இணைவதுதான் சிலுவையின் சிறப்பு.  இந்த இரண்டையும் பிரிக்க முடியாது ஒன்றில்லாமல் மற்றது இல்லை ஏனென்றால் சிலுவைக்கு எப்படி குறுக்குச் சட்டமும் நெடுச் சட்டமும் அவசியமோ அதைப் போன்றது தான் நமது கிறிஸ்துவ வாழ்வும்.


சிலுவைப் பாதையின் பயணம் நமது தேவைகளுக்காக நாம் மேற்கொள்ளும்; திருயாத்திரை அல்ல: மாறாக இயேசுவின் மனநிலை,மதிப்பீடுகள்,நெஞ்சுரம் நமது அன்றாட கிறிஸ்துவ வாழ்வுக்குத் தேவை என்பதற்காகத் தான் சிலுவைப் பயணம். இயேசுவின் பாதையில் நடப்போம்: புதிய மனிதர்களாய் உறவை ஏற்படுத்தும் உன்னதர்களாய் புனிதர்களாய் வாழ உறுதி எடுப்போம். இனிவரும் நாட்களில் இயேசுவே நம் பாதையாகவும் பயணமாகவும் மாறவேண்டும். உள்ளங்கள் உறவின் உறைவிடமாக வேண்டும். ஏதோ கடமைக்காக கலந்து கொள்ளாமல் இயேசுவின் சிலுவைப்பாதை நம் வாழ்க்கைப் பாதையாக அமையவேண்டுமென்ற சிந்தனையோடும் இறை மனித உறவை வளர்க்கும் ஆர்வத்துடனும் பங்கேற்றால் நமது தனி வாழ்வும் பொது வாழ்வும் நிச்சயம் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகமேயில்லை.

No comments: