FreeWebSubmission.com TO KNOW MORE.....: Saints in Liturgy

Saints in Liturgy

திருவழிபாட்டில் புனிதர்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை
  
        

         புதியதாக குழந்தை பிறந்தாலோ அல்லது புதியதாக கிறிஸ்தவ ஆலயங்கள் அல்லது நிருவனங்கள் உருவாக்கப்பட்டாலோ எந்த புனிதருடைய அல்லது புனிதையினுடைய பெயரை தேர்ந்தெடுப்பது அல்லது சூட்டுவது என சில சமயங்களில் குழம்பி விடுவோம் அல்லது எதற்கு புனிதர்களுடைய பெயரை சூட்டவேண்டும் தேவையில்லை என்ற நிலையும் வந்துவிடும். காரணம் அத்தகைய புனிதர்களின் பாதுகாப்பும், இறைநம்பிக்கையும் நமக்கு தேவை என்பதை நினைவு படுத்தி இறைபாதுகாப்பில் வளர புனிதர்களின் துணையை நாடுகிறோம். ஏனென்றால் எந்த ஒரு புனிதரும் விண்ணிலிருந்து வந்தவரல்ல மாறாக நம்மைப்போல் மனிதர்களாக பிறந்து, வாழ்ந்து, இறைவல்லமையில் திலைத்திருப்பவர்கள். அவர்களது வழிமுறை, வாழ்க்கைமுறை நமக்கு ஒரு சிறந்த துணையாக இருக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் மையப்படுத்தி ஏன் புனிதர்களை நினைவு கூறவேண்டும் என்பதை திருச்சபையின் வரலாற்று மற்றும் இறையியல் பின்னனிகளோடு புரிந்து கொள்ள முயல்வோம்.

சொல் விளக்கம்

        “புனிதர்” என்ற வார்த்தையின் பொருள் விளக்கம் காண மூலமொழிச் சொற்கள் மூலம் சொல் விளக்கம் காண முயல்வதே சிறந்தது. புனிதம் அல்லது புனிதர் என்பதை எபிரேய மொழியில் “குவதோஸ்” என்றும் கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு “பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “வேறுபடுத்தப்பட்ட” என்று வார்த்தையளவில் பொருள்கொள்ள முடியும். இதே நிலையில் தான் தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் புனிதம் என்பது கடவுளை குறிக்கக்கூடிய சொல்லாகவும், கடவுளை வழிபட பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருள்களையும், இடங்களையும் குறிக்கக் கூடியதாகவும, கடவுளை மட்டுமே சார்ந்ததாகவும் கருதி வந்தனர். மிகக்குறிப்பாக இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்தவர்கள் அனைவரையும் தொடக்க கால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. இன்னும் சிறப்பாக புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களை புனிதர்கள் என்று அழைத்துள்ளதை 1பேதுரு 2. 9 “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்” என்று காணமுடிகிறது. இந்த நிலை இயேசுவுக்குள் திருமுழுக்கு பெற்றுள்ள அனைவரையும் புனித நிலைக்கு உயர்த்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது. இப்படி வார்த்தையின் பொருள் புரிந்துகொண்ட பிறகு அதனை தொடர்ந்து வரக்கூடியவைகளை புரிந்துகொள்வது எளிதாகும்.


யார் புனிதர்? 


         தொடக்க கால திருச்சபை மிக்குறிப்பாக வேத கலாபனை காலத்தில், இயேசுவுக்காக துன்ப துயரங்களை அனுபவித்து, தங்களது உயிரை துறந்த அனைத்து கிறிஸ்தவர்களையும் புனிதர்கள் என்றே தொடக்க நிலையில் அழைத்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து வந்த காலக்கட்டங்களில் யேசுவின் வார்த்தைகளை கடைபிடித்து யேசுவின் துன்பத்தை, போதனையை, வாழ்க்கையை தங்களது வாழ்க்கை சூழ்நிலைகளில் பின்பற்றி கடவுளையும் மற்றவரையும் அன்பு செய்து அத்தகைய அன்பை செயல்களில் வெளிப்படுத்தி வாழ்ந்தவர்களை புனிதர்கள் என்று திருச்சபை அழைத்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்தவரில் இயேசுவைக் காண துடித்த பல நலல் உள்ளங்கள்  மிகக்குறிப்பாக உடல் நோயால் துன்புறுவோரில், ஏழைகளில், நோயாளிகளில், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்ட கடும் தவம் செபம் நோன்பால் யேசுவுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் என இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். எப்படி இருப்பினும் யேசுவின் வார்த்தைகளை, செயல்களை ஏதாவது ஒரு சில வழிகளில் கடைபிடித்து கடவுளின் அன்பை மற்றவரும் அனுபவித்து மகிழ துணைபுரிந்தவர்களே புனிதர்கள் என திருச்சபை அவர்களது மரணத்திற்குப் பிறகு சிறப்பித்து அழைக்கிறது. இத்தகைய நிலை தங்களுக்கு தாங்களாகவே கொடுத்துகொண்ட ஒன்றல்ல, மாறாக புனிதம் என்பது கடவுளின் கொடை. இவ்வுலக வாழ்க்கை நிலையில் மற்றவரும் கடவுளின் அன்பை பெற்று மகிழ துணைபுரிந்தவர்களை திருச்சபை அவர்களது இறப்பிற்கு பிறகும் நினைவு கூர்ந்து அவர்களை சிறப்பாக புனிதர்கள் என்ற பெயரில் அழைக்கிறது. ஏனெனில் எல்லா கிறிஸ்தவரும் இத்தகைய புனித நிலைக்கு உயர்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறது.

திருச்சபை வரலாற்றில் புனிதர் வணக்கம்


      முதலாம் நூற்றாண்டுகளில் புனிதர்களைப்பற்றியும் அவர்களுக்கு செலுத்தப்பட்ட வணக்கம் பற்றியும் தெளிவான கருத்துகள் இடம் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் ஏறக்குறைய 155 அல்லது 156 ம் ஆண்டுகளில் இருந்து புனிதர்களுக்கான சிறந்த வணக்கம் நடந்துள்ளதற்கான ஆதார சான்றுகள் உள்ளன. மிககுறிப்பாக மறைசாட்சியான சுமிர்னா நகர் ஆயர் போலிகார்ப் அவர்களின் எலும்புகளை கிறிஸ்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் மாற்றி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவர் இரத்தம் சிந்தி இறந்த நாளை இறைமகிமைக்கு உயர்தப்பட்ட பிறந்த நாளாக கொண்டாடியதை திருச்சபையின் வரலாற்று ஏடுகள் சான்று பகர்கின்றன. அதோடு மற்றுமொரு சான்று புனித சிப்பிரியன் (250) குருக்களுக்கு எழுதிய தனது கடிதத்தில் “கிறிஸ்துவுக்காக உயிர்தியாகம் செய்தவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அவர்களின் நினைவு நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் தவறாது கிறிஸ்தவர்கள் அவர்களின் கல்லறைகளில் ஒன்றுகூடி செபிக்க” அழைப்பு விடுத்துள்ளார்.


              இந்த நிலையில் தான் புனிதர் வணக்கம் தொடக்க கால திருச்சபையில் சிறப்பு பெற்றுள்ளதாக காண முடிகிறது. இத்தகைய புனிதர் வணக்கம் மறைசாட்சியர் மற்றும் மறைஆயர்களுக்கு என்று அவர்கள் வாழ்ந்து இறந்த மறைமாவட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. மறைசாட்சியர் என்பது “மார்த்தீரோன்” என்ற கிரேக்க வார்த்தயிலிருந்து வந்தது. இதற்கு “இரத்தம் சிந்தி கிறிஸ்துவுக்காக உயிர்தியாகம்” செய்தவர் என்று பொருள். இத்தகைய நிலையில் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த புனிதர்களின் இறந்த நினைவுநாளில் தொடக்ககால திருச்சபை அவர்களது கல்லறைகளில் ஒன்று கூடி அவர்களோடு இணைந்து கடவுளுக்கு தங்களது செபங்களை அர்ப்பணித்ததை காணமுடிகிறது. அதோடு ஒரு குறிப்பிட்ட மறைமாவட்டத்தின் ஆயர் இறந்த ஆண்டு நினைவு நாளில் கிறிஸ்தவர்கள் ஆயரது கல்லறையில் ஒன்றுகூடிவந்து செபித்து தங்களது ஒன்றிப்பை அர்ப்பண செபங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி ஒவ்வொரு மறைமாவட்டமும் தனித்தனியாக இறந்த மறைசாட்சிகளை, மறை ஆயர்களை நினைவு கூர்ந்து ஒன்றுகூடி செபித்து வந்துள்ளது. இத்தகைய விழாக்களை நினைவு தினங்களாகவும் மேலும் இதைத் தொடர்ந்து இயேசுவுடன் வாழ்ந்து இறந்த திருத்தூதர்களின் இறப்பை திருவிழாவாகவும் கொண்டாடும் பழக்கம் ஏறக்குறைய 3-ம் நூற்றாண்டுகளிலிருந்து நடைமுறையில் இருந்துள்ளது.


உரோமையில்

           ஏறக்குறைய 2-ம் நூற்றாண்டுகள் வரை உரோமை நகரில் புனிதர் வணக்கம் சிறந்த நிலையில் இருந்ததாக சொல்லமுடியாது மாறாக குடும்ப அல்லது உறவினர்கள் என்ற அளவிலேயே இருந்துள்ளது. ஆனால் திருத்தந்தை இரண்டாம் சிக்டஸ் (258) மற்றும் அவருடன் 6 திருத்தொண்டர்கள் நெருப்பிலிடப்பட்டு மறைசாட்சிகளாக இறந்த பிறகு கிறிஸ்தவர்கள் சிறப்பாக அவர்களது கல்லறைகளில் ஒன்றுகூடி செபித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய உரோமையில் 313 க்கு பிறகு தான் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து இறந்தவர்களின் கல்லறைகளின் மேல் மறைசாட்சிகள் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. காரணம் 3-ம் நூற்றாண்டுகள் வரை வலேரியன் கொடுமைகளில் கிறிஸ்துவர்கள் அதிகமாகவே கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர் உயிர் தியாகம் செய்யும் நிலை அதிகமாகவே இருந்துள்ளது. மற்றொரு காரணம் கிறிஸ்தவம் ஒரு மதமாக அங்கிகரிக்கப்பட்ட பிறகு தான் இத்தகைய கொடுமைகள் தளர்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஏறக்குறைய 3-ம் நூற்றாண்டுகளிலிருந்து புனிதர் என்பது இயேவுக்காக இறந்த ஒரு நபருக்கு பொருந்தக்கூடிய நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை காண முடிகிறது. இப்படி இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர்தியாகம் செய்த நபர்களின் இறந்த நினைவு நாளே அவர்களது விண்ணகப் பிறப்பின் நாளாக கருதி அன்றைய தினம் அவர்களது கல்லறைகளில் ஒன்றுகூடி இறைவார்த்தை பகிர்விலும, திருவிருந்து பகிர்வு கொண்டாட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதை தொடக்க கால திருச்சபை வரலாற்று ஏடுகள் எடுத்துரைக்கின்றன.


          ஏறக்குறைய 5 மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் வேரிட்டு வளர்ந்து வந்த கால கட்டம் ஒவ்வொரு கிறிஸ்துவ சமூகத்திலும் இத்தகைய மறைந்த மறைசாட்சிகளின் எண்ணிக்கையும் மறைஆயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. எனவே பல இடங்களில் மறைசாட்சிகளின் நினைவை மட்டும் கொண்டாடடினால் போதும் என கிறிஸ்தவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 10-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய புனிதர்களின் பட்டியலை தொகுத்து ஒருங்கிணைந்த உரோமை புனிதர் பட்டியலை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏறக்குறைய 11-ம் நூற்றாண்டில் இருந்த திருத்தந்தை 7-ம் கிரகோரி புனிதர்களை மறைசாட்சிகள்; மற்றும் மறைஆயர்கள் என இரண்டாக வகைப்படுத்தினார். இந்த காலக்கட்டத்தில் தான் புனிதர்களின் மன்றாட்டு (பிராத்தனை) திருச்சபையில் உருவானது. பல புனிதர்களின் பரிந்துபேசுதலை நினைவு கூறும் வகையிலும், தனிப்பட்ட புனிதரை நினைவு கூறும் அளவிலும் இத்தகைய மன்றாட்டுகள் இ;டம் பெற்றன. ஏறக்குறைய திரிதெந்தின் சங்கம் (15-ம் நூற்றாண்டுகள்) வரை உரோமை புனிதர்களின் பெயர் பட்டியல்படி புனிதர்களின் எண்ணிக்கை 270 ஆகத்தான் இருந்துள்ளது. ஆனால் 17ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கிறிஸ்தவருக்கு அவரது இறப்பிற்கு பிறகு கொடுக்கப்படுகிற சிறந்த இந்த புனித நிலையை நிர்ணயிக்கும் உரிமையை திருத்தந்தைக்கு உரிய அதிகாரமாகவும், ஒரு நபரை அவரது இறப்பிற்கு பிறகு அவர் வாழ்ந்து வந்த நிலை, அவரது போதனை, கடைபிடித்து வந்த நற்பண்புகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் உறுதி செய்யப்பட்டது.


           இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் மீண்டும் இந்த உரோமைப் புனிதர்களின் பெயர் பட்டியலை முறைபடுத்தியது. மிகக் குறிப்பாக அகில உலக கிறிஸ்தவர்களின் தேவையை மையப்படுத்த முயன்று பல புனிதர்களின் பெயரை நீக்கியும், சில புனிதர்களின் பெயர்களை சேர்த்தும் புதிய பட்டியலை உருவாக்கியது. மற்றும் புனிதர்களின் கொண்டாட்டங்களை 5 நிலைகளில் வகைப்படுத்தியது: மறைசாட்சியர், பெருவிழா, திருவிழா, நினைவு மற்றும் விருப்ப நினைவு என்று வழிபாட்டு நிலையில் கொண்டாட பணித்தது. இன்றும் நமது பங்கு ஆலயங்களில் உள்ள பலி பீடத்தில் ஏதாவது ஒரு புனிதர் அல்லது புனிதையரின் திருப்பண்டங்கள் பதிக்கப்படுவதும் தொடக்க கால திருச்சபை எவ்வாறு ஒரு குறிப்பிட்ட புனிதரின் இறந்த தினத்தன்று ஒன்று கூடி வந்து இறைவார்த்தை பகிர்விலும், திருவிருந்து பகிர்விலும் கலந்து கொண்டு இறைவனுக்கு புகழ் சேர்த்ததோ அதேபோல இயேசுவுக்குள் திருமுழுக்கு பெற்றுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் புனிதர்களோடு இணைந்து இறைவனுக்கு நன்றிபலி செலுத்த பலிபீடத்தின் முன் ஒன்றுகூடி செபிக்க பணிக்கப் படுகிறது. பல சமயத்தில் நமது பங்கு அல்லது நிறுவனத்தில் உள்ள பலிபீடத்தில் பதிக்கப்பட்டுள்ள அருளியக்கம் எந்த புனிதர் அல்லது புனிதையருடையது என்பதுமே தெரியாமல் இருந்து விடுகிறது.

புனிதர் வணக்கம் தேவையா ? தவறானதா?

   
     சில சமயங்களில் நமது கிறிஸ்தவ வழிபாட்டு செயல்களில் ஆர்வமில்லாமல் ஈடுபடும் போது ஏற்படும் நிலை தான் நாம் செய்வது சரியானதா? அல்லது தவறானதா? என்ற சந்தேக நிலைக்கு நம்மை தள்ளிவிடுகிறது. நம்முடைய வழிபாடுகள் மூலமாக கடவுளை மட்டுமே நாம் ஆராதிக்கின்றோம். மாறாக அன்னை மரியாவுக்கு செலுத்துவது உயர்வணக்கம் என்றும், மற்ற புனிதர்களுக்கு செலுத்துவது மரியாதை அல்லது வணக்கம் என்று திருச்சபை வரையறுத்து தந்துள்ளது. சில சமயங்களில் புனிதர் வணக்கம் குறித்து விவிலியத்தில் ஒன்றுமில்லையே அப்படியென்றால் நாம் செய்வது தவறு தானே என்று நம்மில் ஒருசிலர் நினைக்கக் கூடும். ஆனால் புனிதர் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல மாறாக புனிதர்கள் மூலம் இன்னும் நமது கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற துணைபுரிபவை என்று எண்ணுதல் சாலச்சிறந்ததாகும்.

1. ஓவ்வொரு புனிதரும் ஏதாவது ஒருவிதத்தில் கடவுளை பிறருக்கு வெளிப்படுத்தியவர்கள், அல்லது வாழ்ந்து காட்டியவர்கள். எனவே தான் திருப்பலியில் பயன்படுத்தப்படும் புனிதர்களின் தொடக்கவுரையில் “உம் புனிதர்கள் நடுவில் இறைவா நீர் புகழ்பெறுகிறீர்” என்று செபிக்கிறோம். கடவுளை பின்பற்றுதல் எளிதாக இருக்காது அதே வேளையில் நம்மைப் போல் மனிதராக வாழ்ந்து பல வழி நிலைகளில் கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து காட்டியவர்களது வழிமுறையை பின்பற்றுவது மனிதர்களாகிய நமக்கு எளிதாக தோன்றும்.

2. புனிதர்கள் கிறிஸ்துவ விசுவாசப்பயணத்தில் முன்மாதிரி எனவே தான் தொடக்க திருச்சபையிலிருந்து புனிதர்களின் பரிந்துரையை தேடி சென்றுள்ளனர்.

3. புனிதர்களில் வாழ்க்கை முறையை பின்பற்றி கடவுளை மகிமைபடுத்த மேற்கொள்ளும் முயற்சி. இதன் மூலம் நமது வாழ்வை நெறிபடுத்த துணைபுரியக்கூடியது.

4. புனிதர்கள் இயேசுவுடன் இணைந்து அவரது பாடுகள், மரணம், துன்பத்தின் மூலம் மரணத்தை தழுவி இறைவனுடன் இணைந்திருப்பவர்கள்.

5. கடவுளுடன் சிறந்த நிலையில் உறவு கொண்டு செயல்பட்டவர்கள். இறைவல்லமையை தங்களது வாழ்வில் உணர்ந்து கொண்டவர்கள்.

6. திருப்பலியில் நினைவுகூர்ந்து செபிக்கும் சபை மன்றாட்டில் இறைவனுடன் ஒரு தனிப்பட்ட புனிதர் எவ்வாறு சிறந்த உறவு கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது, நம்மையும் அத்தகைய ஒருசில நிலைகளில் செயல்பட அழைக்கிறது அல்லது தூண்டுகிறது.

7. தனிப்பட்ட புனிதர் பக்தி முயற்சியை நம்மில் உருவாக்குகிறது. அவர்களின் ஒருசில வாழ்க்கை முறைகளையாவது பின்பற்ற நம்மை உற்சாகப் படுத்துகிறது.

8. நமது கிறிஸ்துவ வாழ்வோடு நெருக்கம் கொண்டவர்கள் மற்றும் நமக்கு சிறந்த ஒரு முன் உதாரணமாக திகழ்பவர்கள் புனிதர்கள்.

9. நமது விசுவாசப்பயணத்தில் இறை நம்பிக்கையில் வளர துணை புரிபவர்கள்.

10. நற்செய்தி வார்த்தைகளை, வழிமுறைகளை தங்களது வாழ்வாக்கி நம்மையும் அத்தகைய நிலையில் வாழ, வளர, செயல்பட அழைக்கின்றனர்.


          திருச்சபையில் புனிதர்கள் இறை நம்பிக்கைக்கு முன்மாதிரியானவர்கள். எனவே தான் அவர்களது சாட்சிய வாழ்வை செயல்களை நினைத்து திருச்சபை அவர்களது இறப்பிற்கு பிறகு சிறந்த இடம் தந்து சிறப்பிக்கிறது. அவர்கள் மூலம் நமது வேண்டுதல் விண்ணப்பங்களை இறைவனிடம் சமர்பிக்க ஒரு வழியாக அமைந்தது. ஓவ்வொரு முறையும் வழிபாட்டு கொண்டாடங்களில் சிறப்பாக திருப்பலியில் புனிதர்களின் பெயரை உச்சரித்து ஒன்றுகூடி செபிக்கும் பழக்கம் உள்ளதை தொடக்க காலத் திருச்சபை சுட்டி காட்டி உணர்த்துகிறது.


         மண்ணில் வாழ்ந்து வரும் இந்த மனித சமூதாயம் புனிதர்களின் பரிந்துரையால் புனித வாழ்வில் பங்கு பெற அழைக்கப்படுகிறது. புனிதர்கள் வாழ்வில் கடைபிடித்து வந்த சிறந்த, உயர்ந்த ஆன்மீக வழிமுறைகளை திருவழிபாட்டு செபங்களில் நினைவுகூர்ந்து அருள் வழியில் வாழ, வளர நமக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இயேசுவை பின்செல்ல தூண்டுதலாக இருந்த இறைவார்த்தை அல்லது நற்காரியச் செயல்களை மையப்படுத்தி திருப்பலி செபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறைவனுடன் புனிதர்களுக்கு உள்ள உறவை புதுப்பித்து நமது கிறிஸ்தவ வாழ்வில் இறைவனோடும் அடுத்தவரோடும் உள்ள அன்புறவில் வளர துணைபுரிகின்றன. அதோடு எவ்வாறு ஒவ்வொரு புனிதரும் தங்களது வாழ்வால், செயலால் ஏதாவது ஒரு தனிpவிதத்தில் இறைவனுடன் உள்ள தனி உறவில் ஒன்றித்து வாழ துணைபுரிந்தது என்பதை கண்டுகொண்டு நம்மையும் ஏதாவது சில வழிநிலைகளில் இறைஉறவில் வளர துணை புரிகின்றன.


       நமது இந்திய மண்ணில் வாழ்ந்து இறந்த அன்னை தெரெசாவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களது நிறுவனங்களைப் போன்று எத்தனையோ நிறுவனங்கள் செயல்படுவதை அறிவோம். ஆனால் எத்தனை எதிர்ப்புகள் மத்தியிலும் அவர்களால் மட்டுமே சிறந்த ஒரு சேவையை செய்ய முடிந்தது என்றால் அது அவர்களது தனிசக்தியால் அல்ல மாறாக இறைசக்தியால் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தான் ஒரு முறை அன்னை தெரெசாவை பார்த்து ஒரு நாட்டின் அதிபர் கேட்டாராம் நீங்கள் இந்த நோயாளிகளின் புண்களை துடைத்து மருத்துவம் பார்க்கும் செயலுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை எனக்கு ஊதியம் கொடுத்தாலும் நான் செய்ய மாட்டேன் என்று சொன்னதற்கு அன்னை தெரெசா எனக்கு பத்து லட்சம் ரூபாய் வரை ஊதியம் கொடுத்தாலும் நானும் செய்ய மாட்டேன் ஆனால் இந்த துன்புறும் நபரில் நான் இயேசுவை காண்கிறேன் எனவே நான் இத்தகைய பணிகளை இயேசுவுக்காக செய்கிறேன் என்று பதில் தந்தார்களாம். இறைவனது அன்பு அடுத்தவரை மிகக் குறிப்பாக தேவையில் இருப்பவரை அன்பு செய்வதில் தான் நிறைவு பெறுகிறது. ஓவ்வொரு புனிதரும் ஏதாவது ஒரு வகையில் இப்படி இயேசுவின் மதிப்பீடுகளை தங்களது வாழ்வாக்கியவர்கள். எனவே தான் திருச்சபை அவர்களது இறப்பிற்குப் பிறகும் அவர்களது வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி இயேசுவின் சாட்சிகளாக வாழ, செயல்பட அழைப்பு தருகிறது.

No comments: